கோவையில் இருந்து மேல்படிப்புக்காக சென்றவர்: மலேசியாவில் தவிக்கும் மகனை மீட்டுத்தாருங்கள் - கலெக்டரிடம் பெற்றோர் கோரிக்கை
மேல்படிப்புக்காக சென்று மலேசியாவில் தவிக்கும் மகனை மீட்டுத் தாருங்கள் என்று அவரது பெற்றோர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை,
கோவை சங்கனூர் ரோடு தெய்வநாயகி நகரை சேர்ந்தவர் முத்துராமன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருடைய மனைவி கல்பனா. இவர்களது ஒரே மகன் முகேஷ் வைத்யா (வயது 21). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் (மெக்கானிகல்) இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த படிப்பில் கடைசி 2 மாதம் வெளிநாடு சென்று (புராஜக்ட்) மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி முகேஷ் வைத்யா கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி மலேசியா சென்றார். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பீதியை கிளப்பியது. இதனால் மாணவர் முகேஷ் வைத்யா கோவை வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கிடையில் அவரது பெற்றோர் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியை நேற்றுக்காலை சந்தித்து தங்கள் மகனை மீட்டு வர உதவி செய்யுமாறு கோரி மனு கொடுத்தனர். அதன்பின்னர் அவர்கள் கூறியதாவது:-
மேற்படிப்புக்காக மலேசியா சென்ற எங்கள் மகன் கொரோனா வைரஸ் பீதி காரணமாக அங்கு சிக்கிக்கொண்டுள்ளார். அங்கிருந்து இந்தியா வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. தற்போது எங்கள் மகன் மலேசியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பராமரிப்பில் உள்ளார். அவரோடு படிக்கும் மற்றொரு மாணவர் தினேஷ் என்பவரும் அங்கு உள்ளார். இவர்கள் தவிர 200 இந்தியர்களும் திரும்பி வர முடியாமல் மலேசியாவில் தவிக்கிறார்கள். எனவே எங்கள் மகன் உள்பட அனைவரையும் மலேசியாவில் இருந்து மீட்டு இந்தியா அழைத்து வர உதவி செய்ய வேண்டும். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மனுக்கள் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story