ஊரடங்கு முடிந்த பிறகு குமரி மாவட்டத்தில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம் பெரிய கடைகள் திறக்கப்படவில்லை


ஊரடங்கு முடிந்த பிறகு குமரி மாவட்டத்தில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம் பெரிய கடைகள் திறக்கப்படவில்லை
x
தினத்தந்தி 24 March 2020 12:00 AM GMT (Updated: 23 March 2020 9:06 PM GMT)

ஊரடங்கு முடிந்த பிறகு குமரி மாவட்டத்தில் 50 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பெரிய கடைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

நாகர்கோவில்,

கொரோனா வைரஸ் உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ளது என்று சொல்லும் அளவுக்கு அதன் தாக்கமும், அதன் பாதிப்பும் இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 9 ஆக இருந்தது. 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அனைவரும் சுய ஊரடங்கை 22-ந் தேதி (நேற்று முன்தினம்) அன்று கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடித்தனர். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இருந்த இந்த ஊரடங்கை, தமிழக அரசு நேற்று அதிகாலை 5 மணி வரை நீட்டித்தது.

பயணிகள் கூட்டம் குறைவு

இதனால் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஆவின் பாலகங்கள், மருந்து கடைகள் ஆகியவற்றை தவிர பிற கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. மக்களும் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு பிறகு குமரி மாவட்டத்தில் வாகன போக்குவரத்து தொடங்கியது. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. பெரிய கடைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. நகை கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ரெயில்கள் இயக்கப்படவில்லை.

நெல்லை, மதுரை போன்ற பிற மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகளும், களியக்காவிளை, மார்த்தாண்டம் உள்ளிட்ட உள்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகளின் கூட்டமும் நேற்று அதிகாலை அதிகமாக இருந்தது. இதனால் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையங்களில் பஸ்சுக்காக ஏராளாமான பயணிகள் காத்திருந்தனர். 5 மணிக்கு பிறகு பஸ் நிலையங்களுக்கு பஸ்கள் வந்ததும் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பஸ்களில் ஏறினர். நேரம் ஆக, ஆக பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்டம் குறைந்தது. சில பஸ்களில் பயணிகள் மிக, மிக குறைந்த எண்ணிக்கையிலேயே பயணம் செய்தனர்.

50 சதவீத பஸ்கள் இயக்கம்

குமரி மாவட்டத்தில் மொத்தம் 760 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் எதிரொலியால் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அரசு பஸ்களின் எண்ணிக்கை கொஞ்சம், கொஞ்சமாக குறைக்கப்பட்டு வந்தது. நேற்று குமரி மாவட்டத்தில் 50 சதவீத பஸ்கள் தான் இயக்கப்பட்டது. அதாவது 380 பஸ்கள் மட்டுமே ஓடின. குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

நாகர்கோவில்-திருநெல்வேலிக்கு வழக்கமாக 20 என்ட் டூ என்ட் பஸ்கள் இயக்கப்படும். ஆனால் நேற்று 12 பஸ்களாக குறைக்கப்பட்டன. மதுரைக்கு பைபாஸ் ரைடர் உள்பட 16 பஸ்கள் இயக்கப்பட்டன. இவை தவிர கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அதேபோல் கேரள மாநில எல்லைகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. ஏற்கனவே திருவனந்தபுரம் பஸ்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பிருந்தே நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிவுறுத்தல்

அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களை பொறுத்தவரையில் குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஊட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 80 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை முதல் மதியம் வரை 5 பஸ்கள் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றன.

இந்தநிலையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்போவதாக தகவல் பரவியதை தொடர்ந்து, அந்த பஸ்கள் விழுப்புரம் வரை சென்று திரும்ப அவற்றின் டிரைவர், கண்டக்டர்கள் அறிவுறுத்தப்பட்டனர் என்றும், இதனால் வேறு பஸ்கள் எதுவும் நேற்று இயக்கப்படவில்லை என்றும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story