குப்பையை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குப்பையை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 24 March 2020 3:30 AM IST (Updated: 24 March 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பையை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சி. இங்கு தினந்தோறும் 2 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

அந்த குப்பைகள் தற்போது ஊராட்சியில் உள்ள 15-வது வார்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு அந்த இடத்தில் குப்பைகளை கொட்ட அதிகாரிகள் முடிவு செய்து குப்பைகளை கொட்டி வந்தனர்.

இதையறிந்த வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் தங்கள் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைத்து அங்கு குப்பைகளை கொட்டினால் குடியிருப்பு மற்றும் பள்ளிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதிக்கும் நிலை உள்ளது.

எனவே குப்பைகளை கொட்ட கூடாது என குப்பை வண்டிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அதே இடத்தில் தொடர்ந்த குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட திரளான பொதுமக்கள் நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமைக்க கூடாது. வேறு இடத்தில் அமைத்து அங்கு குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என 100-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட அதிகாரிகளிடம் அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story