ரெயில்கள் இயக்கப்படாததால் சென்னையில் தவிப்பு; குடியிருப்பு பகுதியில் வடமாநிலத்தவர்களை தங்க வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ரெயில்கள் இயக்கப்படாததால்சென்னையில் தவித்தவட மாநிலத்தவர்களைகுடியிருப்பு பகுதியில் உள்ளபள்ளிக்கூடம் மற்றும் சமுதாய கூடத்தில்தங்க வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர்,
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்பட பிற மாநிலங்களில் இருந்தும் இணைப்பு ரெயில் மூலம் வடமாநிலத்துக்கு செல்ல வேண்டிய பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்து இருந்தனர்.
ஆனால் 31-ந்தேதி வரை அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் சென்டிரல் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சென்னை மாநகராட்சி மற்றும் போலீசார் இணைந்து சென்னையில் பரிதவித்த வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதனை செய்தனர்.
பின்னர் அவர்களை போக்குவரத்து போலீஸ் வாகனங்களில் ஏற்றி, திருவொற்றியூர், மாதவரம், புழல் போன்ற பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்க வைத்தனர். மேலும் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் திருமண மண்டபங்களில் தங்க வைத்தால் செலவாகும் என்பதால் இவர்களை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடம் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த வடமாநிலத்தவர்களை திருச்சினாங்குப்பம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைப்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
இதை கேள்விப்பட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள், வடமாநிலத்தவர்களை தங்க வைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பள்ளி வாசலில் ஒன்று கூடினர்.
வட மாநிலத்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று எங்களுக்கு அச்சம் உள்ளது. அப்படி யாருக்காவது இருந்துவிட்டால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் அவர்களை இங்கே தங்க வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள் 97 பேரும் திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மணலி அருகே சின்னசேக்காடு பகுதியில் உள்ள சமுதாயக்கூடத்தில் வடமாநிலத்தவர்களை தங்க வைக்கக் கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை மாதவரத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்துச்சென்று மாநகராட்சி அதிகாரிகள் தங்க வைத்தனர்.
அதேபோல வடமாநிலத்தைச் சேர்ந்த 63 பேரை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சென்னை புதுவண்ணாரப்பேட்டை மங்கம்மாள் தோட்டம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.
ஆனால் வடமாநிலத்தை சேர்ந்த இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தார்களா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். புது வண்ணாரப்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் ஏற்காததால் வேறு வழியின்றி வாகனங்களை ஏற்பாடு செய்து வியாசர்பாடி முல்லைநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்க அழைத்துச்சென்றனர்.
மேலும் சென்டிரல் ரெயில் நிலையத்தில் காத்திருந்த நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்களை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 31-ந் தேதி வரை முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னை சென்டிரல் வந்து கேரளாவுக்கு செல்ல முடியாமல் பரிதவித்த 100-க்கும் மேற்பட்டோர் பாரிமுனை, பூக்கடை ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்தனர்.
அவர்களை மாநகராட்சி மற்றும் சுகாதார அதிகாரிகள் போலீஸ் துணையுடன் மீட்டு வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். முன்னதாக அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? எனவும் சோதனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story