வேலூர் மாவட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்காணிக்க 3 குழு அமைப்பு - கலெக்டர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்காணிக்க 3 குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
அடுக்கம்பாறை,
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறி காணப்படுவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் 200 படுக்கைகள், சிகிச்சை அளிக்க மருத்துவ உபகரணங்கள் உள்ளன. இதனை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று மாலை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவிற்காக புதிதாக கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. அந்த கட்டிடத்தில் தற்காலிகமாக கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி 144 தடை உத்தரவு நாளை (இன்று) மாலை 6 மணி முதல் வேலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்படுகிறது. அதனால் பெட்ரோல், பால், காய்கறி, சமையல் கியாஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மளிகைக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து கடைகளும் மூடப்படுகிறது.
ேதசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஓட்டல்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக-ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள சோதனை சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ஆம்னி பஸ்கள் இயக்க கூடாது என்றும், தங்கும்விடுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தங்கும் விடுதிகளுக்கு வரும் நபர்கள் குறித்து அதன் உரிமையாளர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கவும், கிராமப்புற பகுதிகளில் வெளிநாடு மற்றும் பிறமாநிலங்களில் இருந்து வந்து தங்கும் நபர்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 62 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காவிட்டால், அவர்களின் பாஸ்போர்ட் புதுப்பிக்கும்போது ரத்து செய்யப்படும். வேலூா் சி.எம்.சி., அடுக்கம்பாறை மற்றும் பென்ட்லென்ட் ஆகிய 3 மருத்துவமனைகளில் ெகாரோனா தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபர்கள் மற்றும் கொரோனா அறிகுறி காணப்படுவர்களை தனிமைப்படுத்த வி.ஐ.டி.யில் ஒரு மையம் தயார் செய்யப்படுகிறது. கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்களை கண்காணிக்க 3 குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்யாணம் முதல் இறப்பு வரையிலான நிகழ்ச்சியில் 4 பேருக்கு மேற்பட்டவர்கள் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கெேரானா தடுப்பு விழிப்புணர்வு வாகனத்தை பார்வையிட்டார்.
போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிவண்ணன் (பொறுப்பு), அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டீன் செல்வி, கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வேலூர் தாசில்தார் சரவணமுத்து, வருவாய் ஆய்வாளர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story