ஆலத்தூர் ஊராட்சியில் உள்ளாட்சி அமைப்பு சார்பில் தடுப்பு பணிகள் தீவிரம்


ஆலத்தூர் ஊராட்சியில் உள்ளாட்சி அமைப்பு சார்பில் தடுப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 24 March 2020 4:45 AM IST (Updated: 24 March 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி அமைப்பு சார்பில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதூர், 

ஊராட்சி உதவி இயக்குனர் செல்லத்துரை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், ஊரகப்பகுதிகளுக்கு வந்து செல்லும் மக்களுக்கும் கொரோனா தொற்று நோய் வராமல் தடுப்பதற்காக கலெக்டர் வினய் உத்தரவுப்படி, கூடுதல் ஆட்சியர் பிரியங்கா கண்காணிப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி ஊரகப்பகுதிகளில் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் கொட்டப்பட்டிருந்த குப்பைக்கழிவுகள் அனைத்தும் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு தேங்கிக்கிடக்காத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்ட இடங்கள், தெருக்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களில் பிளீச்சிங்பவுடர்் தூவப்படுகிறது.

இதே போன்று பொதுமக்கள் நடமாடும் இடங்கள், பொதுமக்கள் அன்றாடம் வந்து செல்லும் பொதுகட்டிடங்கள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீரில் பிளீச்சிங் பவுடர் கலந்து தெளிக்கப்படுகிறது.

இதற்காக பல ஊராட்சிகளின் நிதி நிலையை கருத்தில்கொண்டு அனைத்து ஊராட்சிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் மூலம் முதற்கட்டமாக தலா 2 மூடைகள் வீதம் தரமான பிளீச்சிங்பவுடர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பயன்பாடு மற்றும் தேவைக்கேற்ப மேற்கொண்டு கூடுதலாக வழங்கப்பட உள்ளது.

ஊராட்சிகளுக்கு தேவைப்படும் சுண்ணாம்பு பவுடர் மூடைகள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 56 ஆட்டோக்களை பயன்படுத்தி மாவட்ட அளவில் 1946 கிராமங்களிலும் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலமாகவும், உள்ளூர் தண்டோரா மூலமாகவும் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊராட்சியின் நுழைவுப்பகுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் கைகளை கழுவும் முறைகள் குறித்த படங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 1½ லட்சம் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு பொதுமக்களுக்கு வினியோகிப்பதுடன் அவர்களது வீடுகளிலும் ஒட்டப்பட்டு வருகிறது. வங்கியாளர்களுடன் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகப்படுத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஊரகப்பகுதிகளில் அதிக கிராமங்களில் நடைபெற இருந்த விழாக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள் அனைத்தையும் தடைசெய்திட உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகிகள் தாமாகவே நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். உள்ளாட்சி அமைப்பின் பணியாளர்கள், மகளிர்குழு உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று தற்போதைய சூழலில் அவசியமற்ற வெளியூர் பயணங்களை தவிர்த்திடும்படி எடுத்துக்கூறி வருகின்றார்கள்.

உள்ளாட்சி அமைப்பில் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்த மற்ற பணிகளை நிறுத்தி வைத்துவிட்டு கொரோனா நோய்தடுப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதற்கு மக்களும் ஒத்துழைப்பு கொடுக்கின்றார்கள்.

இதன்படி ஆலத்தூர் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் சரண்யா ராஜவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியகாந்தி, தர்மராஜன், ஊராட்சி செயலாளர் பாப்பாத்தி ஆகியோர் முன்னிலையில் பணிகள் நடந்தன. 

Next Story