திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு


திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 23 March 2020 11:15 PM GMT (Updated: 23 March 2020 11:20 PM GMT)

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு என உயர்வடைந்தது.

திருப்பூர், 

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகள், பல்லடம், பொங்கலூர், தாராபுரம், காங்கேயம் சுற்று வட்டார பகுதிகள் ஆகிய இடங்களில் இருந்து அனைத்து வித காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் இங்கு தினசரி 60 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மளிகைக்கடை வியாபாரிகள், ஓட்டல் கடைக்காரர்கள், சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச்செல்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மக்கள் ஊரடங்கையொட்டி மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று விவசாயிகள் வழக்கத்தை விட காய்கறிகளை குறைவாகவே விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

அந்த வகையில் நேற்று 30 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வழக்கத்தை விட 2 மடங்கு காய்கறிகளை வாங்கிச்சென்றனர். இதனால் காய்கறிகள் விலை கிடுகிடு என உயர்ந்திருந்தது.

அந்த வகையில் நேற்று முன்தினம் ரூ.40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்தரிக்காய் நேற்று ரூ. 60-க்கும், ரூ.30-க்கு விற்ப்பட்ட வெண்டைக்காய் ரூ.40-க்கும், ரூ,15-க்கு விற்கப்பட்ட புடலங்காய் ரூ.25-க்கும், ரூ.30-க்கு விற்கப்பட்ட பீர்க்கங்காய் ரூ.50-க்கும், ரூ.25-க்கு விற்கப்பட்ட பாகற்காய் ரூ.35-க்கும், ரூ.15-க்கு விற்கப்பட்ட முள்ளங்கி ரூ.25-க்கும்,ரூ.20-க்கு விற்கப்பட்ட பீட்ரூட் ரூ.30-க்கும், ரூ.10-க்கு விற்கப்பட்ட முட்டைகோஸ் ரூ.20-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.80-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதே போல் ரூ.150-க்கு விற்கப்பட்ட 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.250-க்கு விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது, மக்கள் ஊரடங்கையொட்டி விவசாய கூலி வேலைக்கு யாரும் வராததால் நேற்று காய்கறிகள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் அனைத்து காய்கறிகள் விலையும் கிடுகிடு என உயர்ந்திருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக வியாபாரிகள் வருகை குறைவாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் வழக்கம் போல வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வழக்கத்தை விட அதிக அளவில் காய்கறிகளை வாங்கிச்சென்று விட்டனர். இதனால் விற்பனையும் விறுவிறுப்பாக இருந்தது என்றனர்.

Next Story