கர்நாடகம் முழுவதும் ஊரடங்கு: பொதுமக்களுக்கு என்னென்ன சேவைகள் கிடைக்கும் - கர்நாடக அரசு அறிவிப்பு


கர்நாடகம் முழுவதும் ஊரடங்கு: பொதுமக்களுக்கு என்னென்ன சேவைகள் கிடைக்கும் - கர்நாடக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 23 March 2020 11:34 PM GMT (Updated: 23 March 2020 11:34 PM GMT)

கர்நாடகம் முழுவதும் ஊரடங்கால் பொதுமக்க ளுக்கு என்னென்ன சேவைகள் கிடைக்கும், என்னென்ன சேவை கிடைக்காது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

பெங்களூரு, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கர்நாடகத்தில் பெங்களூரு, பெங்களூரு புறநகர், மங்களூரு, தார்வார், பெலகாவி, மைசூரு, சிக்பள்ளாப்பூர், குடகு, கலபுரகி உள்பட மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி அந்த பகுதிகளில் என்னென்ன சேவைகள் கிடைக்கும், என்னென்ன சேவைகள் கிடைக்காது என்பது குறித்து விவரங்களையும் மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், பணிமனைகள், கிடங்குகள் மூட வேண்டும்.

* அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களை தொழிற்சாலைகள் மூட வேண்டும்.

5 பேர் சேரக்கூடாது

* வெளிநாடுகளில் இருந்து கர்நாடகத்திற்கு திரும்பியவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும். இதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

* ெபாது இடங்களில் ஒரே இடத்தில் 5 பேர் சேரக்கூடாது. அதே நேரத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

* ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் கூடி பிரார்த்தனை செய்யக்கூடாது. அனைத்து மத விழாக்களையும் நிறுத்த வேண்டும்.

* தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீடுகளில் இருந்தபடியே பணியாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத பணிகள் நிறுவனங்களில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

எல்லை மூடப்படுகிறது

* அனைத்து பயணிகள் போக்குவரத்து, மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுகிறது.

* அத்தியாவசிய பொருட்களை கொண்டுவர தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

* அனைத்து வகையான வாடகை கார்களின் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.

* அத்தியாவசிய சேவைகள் அல்லாத அரசு துறைகளின் அலுவலகங்கள் மூடப்படுகின்றன.

* அண்டை மாநிலங்களுக்கு இடையேயான எல்லை மூடப்படுகிறது. ஆனால் மருத்துவம் மற்றும் சில தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் அதற்கு மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்

பலசரக்கு கடைகள்

* பலசரக்கு கடைகள், உணவு, பால், காய்கறி, பழங்கள், இறைச்சி, மீன் மொத்த மற்றும் சில்லறை கடைகள் திறந்திருக்கும்.

* பெட்ரோல் விற்பனை நிலையங்கள், சமையல் எரிவாயு மற்றும் அது தொடர்பான கிடங்குகள் திறந்திருக்கும்.

* அனைத்து சரக்கு வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

* மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள், மருந்து கடைகள், பரிசோதனை மையங்கள் மற்றும் மருத்துவம் தொடர்பான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் திறந்திருக்கும்.

* போலீஸ், தீயணைப்பு படைகள் செயல்படும்

* உள்ளாட்சி அமைப்புகள், தபால் அலுவலகங்கள் திறந்திருக்கும்.

* மின்சாரம், குடிநீர், நகராட்சி சேவைகள் கிடைக்கும்.

குடிநீர் டேங்கர் லாரிகள்

* வங்கி சேவைகள், ஏ.டி.எம். மையங்கள், தொலைத்தொடர்பு ேசவைகள், இணையதளம், கேபிள் சேவைகள் கிடைக்கும்.

* மின்னணு வணிகம், வீடுகளுக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்யும் சேவைகள் கிடைக்கும்.

* உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

* அச்சு மற்றும் காட்சி ஊடகத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

* பாதுகாப்பு சேவை உள்பட தனியார் காவல் நிறுவனங்கள் செயல்படும்.

* குடிநீர் உற்பத்தி செய்தல், குடிநீர் டேங்கர் லாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மருந்துகள் தயாரிக்கும்...

* பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் திறந்திருக்கும்.

* விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் இருந்து பயணிகளை அழைத்து செல்லும் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

* முகக்கவசங்கள், மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படும்.

இவ்வாறு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Next Story