144 தடை உத்தரவு எதிரொலி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் அணிவகுத்த வாகனங்கள்


144 தடை உத்தரவு எதிரொலி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் அணிவகுத்த வாகனங்கள்
x
தினத்தந்தி 23 March 2020 11:41 PM GMT (Updated: 23 March 2020 11:41 PM GMT)

144 தடை உத்தரவால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ததால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழியாக வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

உளுந்தூர்பேட்டை,

திருச்சி-சென்னை இடையே உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி உள்ளது. திருச்சி மற்றும் சேலம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழியாக செல்கின்றன. இதனால் தினமும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் வருகிற 31-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் பணிபுரியும் சேலம் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.

போக்குவரத்து நெரிசல்

இதனால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில்கள் ஓடாததால், அரசு பஸ்களில் மட்டுமே பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் அரசு பஸ்சில் செல்வது பாதுகாப்பானது அல்ல என்று உணர்ந்த பொதுமக்களில் பலர் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

இதுபற்றி இர்பான் என்பவர் கூறுகையில், எனது சொந்த ஊர் திருச்சி, நான் சென்னையில் பணியாற்றுகிறேன். நான் எப்போது சொந்த ஊருக்கு சென்றாலும் பஸ்சில் தான் செல்வேன். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு செல்கிறேன் என்றார். இதேப்போல் ஆயிரக்கணக்கானவர்கள் மோட்டார் சைக்கிள்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

பல்லாயிரக்கணக்கான வாகனங்கள்

இதுபற்றி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கேட்ட போது, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழியாக பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து சென்றன என்றார்.

ஏ.ஐ.டி.யூ.சி. சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் காரல்மார்க்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பணியாற்றும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.


Next Story