கொரோனா பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கை கர்நாடகத்தில் இன்று முதல் ஊரடங்கு - எடியூரப்பா அறிவிப்பு


கொரோனா பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கை கர்நாடகத்தில் இன்று முதல் ஊரடங்கு - எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 23 March 2020 11:49 PM GMT (Updated: 23 March 2020 11:49 PM GMT)

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கையாக கர்நாடகம் முழுவதும் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நேற்று இரவு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.

பெங்களூரு,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

இந்தியாவிலும் இந்தநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடகத்தில் இந்த நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 25 ஆக இருந்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இந்த நோய் பாதித்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

கர்நாடகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட பெங்களூரு நகரம், பெங்களூரு புறநகர், தட்சிண கன்னடா (மங்களூரு), குடகு, கலபுரகி, பெலகாவி, மைசூரு, தார்வார், சிக்பள்ளாப்பூர் ஆகிய 9 மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த மாவட்டங்களில் அனைத்து எல்லைகளுக்கும் சீல்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளூர் பஸ் போக்குவரத்தை தவிர பிற போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மக்கள் கூடியதால் அரசு ஆதங்கம்

நேற்று முன்தினம் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்தனர். சாலைகளில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் நேற்று காலை அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் அதிகளவில் கடைகளில் குவிந்தனர். மேலும் சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அரசின் உத்தரவை மீறி மக்கள் பொது இடங்களில் கூடியதால் கர்நாடக அரசு ஆதங்கத்தை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு ெசயல்படையில் இடம் பெற்றுள்ள துணை முதல்-மந்திரிகள் அஸ்வத் நாராயண், பசவராஜ் பொம்மை, மந்திரிகள் ஸ்ரீராமுலு, சுதாகர், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டன.

மந்திரி சுதாகர் அறிவிப்பு

இதுபற்றி பெங்களூரு விதானசவுதாவில் நடைபெற்று வரும் கர்நாடக சட்டசபை கூட்டத்தில் மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் அறிவித்தார். அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதை மக்கள் பொருட்படுத்தாமல் இன்று (அதாவது நேற்று) அதிகமாக நடமாடுகிறார்கள். இது கவலை அளிப்பதாக உள்ளது. அதனால் முதல்-மந்திரி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு அமல்

கொரோனா வைரஸ் பாதித்த பெங்களூரு, பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர், தட்சிணகன்னடா (மங்களூரு), மைசூரு, கலபுரகி, பெலகாவி, தார்வார், குடகு ஆகிய 9 மாவட்டங்களில் ஊரடங்கு மாதிரியில் உத்தரவு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. ஆட்டோ, வாடகை கார்கள் உள்பட அனைத்து வகையான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. உள்பட அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. தேர்தல்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எந்த பண்டிகையையும் கொண்டாட அனுமதி இல்லை. ஒன்றுகூடி பிரார்த்தனை செய்யவும் அனுமதி கிடையாது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. வருகிற 31-ந் தேதி வரை இந்த நிலை நீடிக்கும். கர்நாடகத்தில் நிமான்ஸ், ஹாசன், கலபுரகி, உப்பள்ளி, பல்லாரி, மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் பரிேசாதனை மையங்கள் அமைக்கப்படுகின்றன. பெங்களூருவில் உள்ள விக்டோரியா ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் பெங்களூரு புறநகர் பகுதியில் தனி ஆஸ்பத்திரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் பேரில் 200 பேருக்கு பரிசோதனை செய்யும் திறனை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் ஒரு தீவிர கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளோம்.

முதல்-மந்திரி தலைமையிலான உயர்மட்ட குழு, பாலபுரி விருந்தினர் மாளிகையில் இருந்தபடி செயல்படும். அந்த மாளிகை போர் அலுவலகமாக செயல்படும். அது 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் குளுகுளு வசதி கொண்ட அனைத்து பஸ்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

கர்நாடகம் முழுவதும் ஊரடங்கு

இந்த நிலையில் கொரோனா வேகமாக பரவுவதை தடுக்கும் விதமாக 24-ந்தேதி (அதாவது இன்று) முதல் 31-ந்தேதி வரை கர்நாடகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று இரவு அறிவித்தார். இதுதொடர்பான அறிவிப்பை எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று இரவு 9.30 மணிக்கு வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு உள்பட 9 மாவட்டங்களுக்கு 24-ந்தேதி (இன்று) முதல் 31-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது. கொரோனா வைரசை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில மக்கள் ஒத்துழைப்பு அளிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதனால் பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் டவுன் பஸ்கள், வாடகை கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகன போக்குவரத்தும் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அத்தியாவசிய தேவையை தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story