அரசு, தனியார் பஸ்கள் குறைப்பு காய்கறி விலை திடீர் உயர்வு


அரசு, தனியார் பஸ்கள் குறைப்பு காய்கறி விலை திடீர் உயர்வு
x
தினத்தந்தி 24 March 2020 5:21 AM IST (Updated: 24 March 2020 5:21 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அரசு மற்றும் தனியார் பஸ்களின் சேவை குறைக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பாதிப்பினை தடுக்கும் விதமாக புதுவை மாநிலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரதமரின் வேண்டுகோளின்படி மக்கள் சுய ஊரடங்கு நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு முடிந்த நிலையில் புதுவை அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

மேலும் வெளிமாநில வாகனங்களும் புதுவைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை கடைகள் வழக்கம்போல் திறந்து இருந்தன. உழவர்சந்தை, மார்க்கெட்டுகளும் இயங்கின.

காய்கறி விலை உயர்வு

பொதுமக்கள் அந்த கடைகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள், இறைச்சி, உணவு பொருட்களை வாங்கி சென்றனர். நேரம் செல்லச்செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

இதனால் வீட்டிற்கு தேவையான காய்கறி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

புதுவை பெரிய மார்க்கெட்டில் தக்காளி 1 கிலோ ரூ.30-ல் (நேற்றைய விலை) இருந்து ரூ.40-க்கும், கேரட் கிலோ ரூ.40-ல் இருந்து ரூ.80-க்கும் உருளைகிழங்கு கிலோ ரூ.40-ல் இருந்து ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.40-க்கும், சின்ன வெங்காயம் ரூ.50-ல் இருந்து ரூ.60-க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.80-ல் இருந்து ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. காய்கறி விலை அதிகமாக இருந்தபோதிலும் கடைகள் மூடப்படும் என்ற அச்சத்தால் காய்கறிகளை பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கிச்சென்றனர். அதேபோல் மளிகை சாமான்கள் வாங்க பலசரக்கு கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

இதைத்தொடர்ந்து 144 தடை உத்தரவினை காரணம் காட்டி மக்கள் அதிக அளவில் கூடாமல் கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை.

கடைகள் மூடல்

கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் கடைக்காரர்களையும் போலீசார் எச்சரித்தனர். இதனால் போலீசாருக்கும், கடைக் காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவு என்று கூறி கடைகளை மூட போலீசார் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து பெரும்பாலான கடைகள் மூடப் பட்டன.

பஸ் சேவை குறைப்பு

புதுவை மாநிலத்துக்கு வந்த பிற மாநில பஸ்கள் மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. குறிப்பாக கோரிமேடு, மதகடிப்பட்டு, முள்ளோடை, கனகசெட்டிகுளம் வரை தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. எல்லையில் அந்த பஸ்களில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

பின்னர் அவர்கள் சிறிது தூரம் நடந்து வந்து புதுவை எல்லைப்பகுதிக்குள் வந்து புதுவைக்குள் இயங்கும் பஸ்களில் ஏறி சென்றனர். புதுவை எல்லைக்குள்ளும் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் அந்த பஸ்களிலும் குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்தனர்.இதனால் பலர் தங்களது சொந்த வாகனத்திலேயே வேலைக்கு சென்றனர்.

நாடு முழுவதும் 31-ந்தேதி வரை ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளநிலையில் பயணிகள் உள்ளே வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி ரெயில் நிலையமும் இழுத்து மூடப்பட்டது.

முகக்கவசம்

பஸ்களில் பயணம் செய்தவர்களை முகத்தை கைக்குட்டை அல்லது முகக்கவசம் கொண்டு மூடி செல்லுமாறு போலீசாரும், சுகாதாரத் துறையினரும் அறிவுறுத்தினர்.

இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள், பால், பெட்ரோல், டீசல், மருந்து பொருட்கள் ஏற்றி வந்த வாகனங்களை மட்டும் புதுவைக்குள் வர போலீசார் அனுமதித்தனர். கார், இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை எதற்காக புதுவைக்கு வருகிறார்கள்? என்ற விபரத்தை கேட்டு அனுமதித்தனர்.

கிருமிநாசினி

அவர்கள் வந்த வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்தும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏதேனும் உள்ளதா? என்பதை சோதித்தபிறகே அனுமதிக்கப்பட்டனர்.

பஸ்கள் சரிவர இயக்கப் படாததாலும், கடைகள் மூடப்பட்டதாலும் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

Next Story