144 தடை உத்தரவு: தென்காசி– கடையநல்லூர் காய்கறி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்


144 தடை உத்தரவு:  தென்காசி– கடையநல்லூர் காய்கறி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 25 March 2020 4:00 AM IST (Updated: 24 March 2020 5:52 PM IST)
t-max-icont-min-icon

அரசின் 144 தடை உத்தரவை முன்னிட்டு தென்காசி, கடையநல்லூர் காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.

தென்காசி,

அரசின் 144 தடை உத்தரவை முன்னிட்டு தென்காசி, கடையநல்லூர் காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.

கொரோனா வைரஸ் 

உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடக் கூடாது என்ற காரணத்தினால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்து பால், காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள், வணிக வளாகங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தென்காசியில் நேற்று காலையில் இருந்தே காய்கறி மார்க்கெட்டில் அதிகமானோர் வந்து காய்கறிகளை வாங்கினர். இதேபோல் தென்காசி சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். மருந்து கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. பெரும்பாலான நகைக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகளிலும் அதிகமானோர் வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். பலர் கூடுதலான பாட்டில்களையும் வாங்கி சென்றனர். தென்காசி நகர் முழுவதும் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

கடையநல்லூர் 

கடையநல்லூர் மற்றும் சொக்கம்பட்டி, இடைகால், காசிதர்மம், புதுக்குடி போன்ற சுற்றுவட்டார கிராம மக்களுக்கு பிரதான மார்க்கெட்டாக கடையநல்லூர் தினசரி மார்க்கெட் செயல்படுகிறது. இந்த மார்கெட்டில் ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக் வைக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கடையநல்லூர் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் 5 நபர்களாக அனுமதிக்கப்பட்டனர்.

Next Story