பொது இடங்களில் 5 பேர் கூட தடை: பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் கலெக்டர் ஷில்பா பேட்டி


பொது இடங்களில் 5 பேர் கூட தடை:  பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும்  கலெக்டர் ஷில்பா பேட்டி
x
தினத்தந்தி 24 March 2020 10:30 PM GMT (Updated: 24 March 2020 3:58 PM GMT)

பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும். பொது இடங்களில் 5 பேருக்கும் மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை, 

பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும். பொது இடங்களில் 5 பேருக்கும் மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

இது குறித்து அவர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:–

மாவட்ட எல்லைகள் மூடல் 

உலகமெங்கும் பரவலாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்திட தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்திட 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்ட எல்கைகளான காவல்கிணறு, கங்கைகொண்டான், அரியகுளம், கிருஷ்ணாபுரம், மருகால்தலை, புதூர், வன்னிக்கோனேந்தல் ஆகியன மூடப்பட்டன.

5 பேருக்கு மேல் கூட தடை 

5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பொது இடங்களில் ஒன்றாக கூடுவதற்கோ, வாகனங்களில் செல்வதற்கோ அனுமதி இல்லை. ஊர்வலமாக செல்வதற்கும், ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் அனுமதி இல்லை. பொதுமகள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிக்க வேண்டும். தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும்.

சமூக, காலாசார, அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், விளையாட்டு, கல்வி தொடர்பான கருத்தரங்கம் மற்றும் மாநாடு நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 16–ந் தேதி முன்பாக திருமண மண்டபங்களில் பதிவு செய்யப்பட்ட திருமணம் உள்ளிட்ட பிற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள 30 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. புதிதாக திருமணம் நடத்த மண்டபவங்களை முன்பதிவு செய்யக்கூடாது.

584 பேர் கண்காணிப்பு 

வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நெல்லை மாவட்டத்துக்கு வந்தவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். இதுவரை 584 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரேனா தனிமை வார்டில் ஆலங்குளத்தை சேர்ந்த ஒருவருக்கும், ராதாபுரத்தை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 65 வயதுடைய பெண்ணுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகின்றன.

பால், காய்கறிகள் 

மருந்து, பால், காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் வழக்கம் போல் கிடைக்கும். கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இறைச்சி, மீன் கடைகள் திறந்து இருக்கும். அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், பணிமனைகள், டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் தவிர, பிற அரசு மற்றும் தனியார் வாகனங்கள், வாடகை கார்கள் அனைத்தும் இயங்காது.

 பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மருந்து கடையில் கூடுதல் விலைக்கு முக கவசம் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த கடையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கூடுதல் விலைக்கு முக கவசம் விற்றது உறுதி செய்யப்பட்டதால், அந்த கடை சீல் வைக்கப்பட்டு உள்ளது. கூடுதல் விலைக்கு முக கவசம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுத்துறைகளான மாவட்ட நிர்வாகம், காலல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம், மருத்துவத்துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து இயங்கும். தகவல் தொழில் நுட்ப அலுவலர்கள், வீட்டில் இருந்து பணியாற்றுவார்கள்.

அத்தியாவசி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீதம் தொழிலாளர்களை கொண்டு இயங்கும். விடுதிகளில் தங்கியுள்ள பணியாளர்களுக்கு பார்சல் மூலம் உணவு வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பெரிய ஓட்டல்கள் டேபிள், சேர் போட்டு உணவு பரிமாறக்கூடாது.

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, 144 தடை உத்தரவு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி கலெக்டர் 

இது குறித்து தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் கூறும் போது, “கடந்த 1–ந் தேதிக்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து தென்காசி மாவட்டத்துக்கு வந்துள்ள அனைவரும் தங்களது வீட்டில் தங்களை சுய தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். நோய் அறிகுறிகள் தென்பட்டால் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1077 அல்லது 04633–290548 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்று கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எவ்வித தேவைக்கும் வெளியே வர வேண்டாம். வீடுகளிலேயே தங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்“ என்றார்.

Next Story