வெளிநாடுகளில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பு கலெக்டர் தகவல்


வெளிநாடுகளில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 March 2020 5:00 AM IST (Updated: 24 March 2020 10:43 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்திற்கு கரும்பு வெட்டும் தொழிலுக்காக மராட்டிய மாநிலத்திலிருந்து 67 பேர் கடந்த 20-ந் தேதி வந்து வேலை செய்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவக்குழுவினர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தனர். இதில் 8 பேருக்கு சாதாரண காய்ச்சலும் மற்றவர்களுக்கு எந்தவிதமான காய்ச்சல் அறிகுறிகள் ஏதுமில்லை. மேலும் அவர்களுக்கு அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பொது நல மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

278 பேரில்...

இதேபோல், அரியலூர் மாவட்டத்திலிருந்து பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்று தற்போது சொந்த ஊர் திருப்பியுள்ள 278 பேரில், 32 பேருக்கு 28 நாட்களுக்கு மருத்துவக்குழுவினரால் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மீதமுள்ள 246 நபர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு அறையிலுள்ள மருத்துவக்குழுவினரால் அலைபேசி வாயிலாக தினந்தோறும் தொடர்பு கொள்ளப்பட்டு, கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் சளி, காய்ச்சல் மற்றும் இதர உடல் உபாதைகள் உள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். வெளிநாடுகளிலிருந்து வந்து, வீடுகளில் தனிமைப்படுத்திய நிலையில் உள்ள அவர்களின் வீட்டு முகப்பு பகுதிகளில் ஒட்டுவில்லைகள் ஒட்டி, கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story