கோவையில் தட்டுப்பாட்டை போக்க முககவசம் தயாரிக்கும் பணியில் மத்திய சிறை கைதிகள் மும்முரம்


கோவையில் தட்டுப்பாட்டை போக்க முககவசம் தயாரிக்கும் பணியில் மத்திய சிறை கைதிகள் மும்முரம்
x
தினத்தந்தி 24 March 2020 11:00 PM GMT (Updated: 24 March 2020 7:42 PM GMT)

கோவையில் தட்டுப்பாட்டை போக்க முககவசம் தயாரிக்கும் பணியில் கோவை மத்திய சிறையில் கைதிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கோவை,

கோவை காந்திபுரத்தில் மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் சிறை பஜார் உள்ளது. இங்கு சிறை கைதிகள் மூலம் உணவு, துணிப்பை உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில், நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட கைதிகள் பணியாற்றி வருகின்றனா்.

மேலும் அங்கு பேக்கரி பொருட்கள், சோப் ஆயில், பினாயில், காக்கி சீருடை துணி, செக்கு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் முககவசம் அணிந்தும், கைகளில் கிருமி நாசினி தெளித்தும் வருகின்றனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முககவசம் அணிந்து பணியில் ஈடுபடுகிறார்கள். இதனால் முககவசத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதை போக்கும் வகையில் கோவை மத்திய சிறையில் கைதிகள் முககவசம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து கோவை மத்திய சிறை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் கூறியதாவது:-

கோவை மத்திய சிறை கைதிகளால் தயாாிக்கப்படும் பொருட்கள் சிறை பஜார் மூலம் விற்கப்படுகின்றன. இதற்கு பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக கோவை மத்திய சிறை கைதிகள் மூலம் முககவசம் தயாரிக்கப்படுகிறது.

இதற்காக 20-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு தனியார் நிறுவனம் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. முககவசம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள், கருவிகள் சிறைத்துறை நிர்வாகத்தால் கொள்முதல் செய்து கொடுக்கப்படுகிறது.

இதையடுத்து முககவசம் தயாரிக்கும் பணிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் முககவசங்கள் தயாரிக்கப்படுகிறது. சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து, முககவசத்துக்கு விலை நிர்ணயம் செய்யப்படும். அதன்பிறகு சிறை பஜார் மூலம் முககவசம் விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story