வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியதால் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது


வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியதால் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 25 March 2020 4:30 AM IST (Updated: 25 March 2020 2:06 AM IST)
t-max-icont-min-icon

வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியதால் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா? என மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்றுமாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டன.

பஸ்கள், கார்கள் ஆட்டோக்களும் ஓடாது. இதனால் சென்னை, திருப்பூர், கோவை, சேலம் உள்பட பல பகுதிகளில் பணி புரிந்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ்கள் மூலம் நேற்றுகாலை தஞ்சைக்கு வந்தனர். தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகை ஆகிய பகுதிகளுக்கு குறைந்தஅளவில் பஸ்கள் இயக்கப்பட்டதால் அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கூடுதல் பஸ்கள்

இதனால் புதிய பஸ் நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ்சிற்காக காத்திருந்தனர். இதை அறிந்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூடுதல் பஸ்களை இயக்கினர். தங்கள் ஊருக்கு செல்லக்கூடிய பஸ்கள் வருவதை பார்த்தவுடன் பயணிகள் வேகமாக ஓடி சென்று பஸ்கள் நின்ற பிறகு முண்டியடித்து கொண்டு ஏறினர். சிலர் ஜன்னல் வழியாக பஸ்சிற்குள் நுழைந்தனர். இதன்காரணமாக எல்லா பஸ்களிலும் கூட்டம் அதிகமாக தான் இருந்தது.

ஒரு இடத்தில் மக்கள் அதிகமாக கூடாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் நேற்று பஸ்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததுடன், பஸ் நிலையத்திலும் அதிகமான பயணிகள் கூடியதால் கொரோனா வைரஸ் பரவுமோ? என்ற அச்சம் நிலவியது. இதையடுத்து பொது சுகாதாரத்துறை சார்பில் புதிய பஸ் நிலையத்தில் மருத்துவக்குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வெளியூர்களில் இருந்து வந்த பஸ்கள் எல்லாம் ஒரு இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை எல்லாம் போலீசார் வரிசையாக மருத்துக்குழுவினரிடம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களது பெயர், முகவரி, எங்கிருந்து வருகிறீர்கள் போன்ற விவரங்களை மருத்துவ பணியாளர்கள் பெற்றனர்.

கிருமிநாசினி

பின்னர் தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்களது உடலின் வெப்பநிலை கண்டறியப்பட்டது. மேலும் அவர்களது கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. வெளியூரில் இருந்து வந்த பயணிகளை அனைவரையும் நீங்கள் வீட்டிற்கு சென்றவுடன் வெளியே எங்கேயும் செல்லக்கூடாது. வருகிற 31-ந் தேதி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி அறிவுறுத்தினார்.


Next Story