144 தடை உத்தரவு: சேலத்தில் அரசு, தனியார் பஸ்கள் நிறுத்தம் பயணிகள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு


144 தடை உத்தரவு: சேலத்தில் அரசு, தனியார் பஸ்கள் நிறுத்தம் பயணிகள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 8:54 PM GMT)

144 தடை உத்தரவு எதிரொலியாக சேலத்தில் அரசு, தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

உலக மக்களையே நடுங்க வைத்து உள்ள கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த 22-ந்தேதி மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக நேற்று மாலை 6 மணி முதல் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று மாலை முதல் சேலத்தில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. சேலம் மாவட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே அவரவர் சொந்த ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களில் புறப்பட்டு சென்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று காலை சேலத்தில் இருந்து வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சேலம் புதிய பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

அரசு பஸ்கள் நிறுத்தம்

அதன்படி சேலத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கோவை, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை பயணிகள் கூட்டம் அலைமோதியது. டவுன் பஸ்களில் பயணிகள் குறைவாகவே காணப்பட்டது.

இது குறித்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் கூறும்போது, 144 தடை உத்தரவையொட்டி சேலத்தில் வேலை பார்க்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக போதுமான அளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அதாவது பயணிகள் வருகைக்கு ஏற்ப தேவையான பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன. இன்று (நேற்று) மாலை 6 மணி முதல் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன என்று கூறினார். இதன்படி அரசு பஸ்கள் போக்குவரத்துக்கழக பணிமனைகளில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

தனியார் பஸ்கள்

இதே போன்று தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டன. இது குறித்து சேலம் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரவீந்திரனிடம் கேட்ட போது, சேலத்தில் இருந்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு மொத்தம் 496 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதையடுத்து இன்று (நேற்று) மாலை 6 மணி முதல் அனைத்து தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டன. மேலும் கடந்த சில நாட்களாக தனியார் பஸ்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன என்று கூறினார்.

நிவாரணம் வழங்க வேண்டும்

இதே போன்று சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ் கூறும் போது, சேலம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வந்தன.. இந்த நிலையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளதால் சேலத்தில் அனைத்து லாரிகளும் இன்று (நேற்று) மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டன என்று கூறினார்.

சேலம் மாவட்ட சுற்றுலா வாகன உரிமையாளர் மற்றும் டிரைவர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் விஜய் கூறியதாவது:-

சேலத்தில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக அரசு உத்தரவுபடி அனைத்து சுற்றுலா வாகனங்களும் நிறுத்தப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் பரவ தொடங்கியதில் இருந்தே சுற்றுலா வாகனங்கள் இயக்கம் குறைந்து விட்டது. அதாவது பொதுமக்கள் யாரும் சுற்றுலா செல்லவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக போதுமான வருமானம் இல்லை.

எனவே மாதத்தவணை, காப்பீட்டுத்தொகை, வரி ஆகியவை கட்டுவதற்கு அரசு எங்களுக்கு 3 முதல் 6 மாதம் வரை காலஅவகாசம் வழங்க வேண்டும். மேலும் ஆட்டோ டிரைவர்களுக்கு வழங்குவது போல் சுற்றுலா வாகன டிரைவர்களுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாலைகள் வெறிச்சோடின

இதே போன்று சேலத்தில் நேற்று மாலை முதல் ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. 144 தடை உத்தரவு எதிரொலியாக அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டதால், சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. எப்போது பஸ்கள் வரும், சொந்த ஊருக்கு செல்லலாம் என பயணிகள் அங்கும், இங்கும் அலைமோதியதை காண முடிந்தது.

மேலும் ஆத்தூர், எடப்பாடி, தலைவாசல், மேட்டூர், தாரமங்கலம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் மாலை 6 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டதுடன், வாகனங்கள் ஓடாததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.


Next Story