ஒரு வாரம் தொடர் விடுமுறை: டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க போட்டா போட்டி


ஒரு வாரம் தொடர் விடுமுறை: டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க போட்டா போட்டி
x
தினத்தந்தி 24 March 2020 11:30 PM GMT (Updated: 24 March 2020 10:05 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை என்பதால் மதுபாட்டில்களை வாங்க மது பிரியர்களிடம் நேற்று போட்டா போட்டி ஏற்பட்டது. இதனால் ரூ.700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சேலம்,

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் மற்றும் வழிப்பாட்டு தலங்களை முட அரசு உத்தரவிட்டது. அதன்படி அனைத்தும் மூடப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது. மாறாக அத்தியாவசிய பொருட்களான மருந்து பொருட்கள், காய்கறி, அரிசி போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகளை திறப்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மது பிரியர்கள் அதிகம் கூடும் டாஸ்மாக் மதுபானக்கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதுவும் நேற்று மாலை 6 மணி முதல் வருகிற 31-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து மூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்குவதற்காக சென்னை மாநகரில் பணத்துடன் அலைந்து திரிந்தனர்.

சேலத்தில் மது பிரியர்கள் உற்சாகம்

குறிப்பாக நேற்று மாலை 6 மணியுடன் கடைகளை மூட உத்தரவிட்டதால் மாலை பொழுது கடைகளில் மது பாட்டில்கள் வாங்க போட்டா போட்டி ஏற்பட்டது. பல கடைகளில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. ஒரே நபர், 10 பாட்டில்கள் வரை வாங்கி செல்வதையும் காணமுடிந்தது.

இதற்காக மதுபிரியர்கள் உற்சாகத்துடன் கட்டை பைகளையும் தயார் நிலையில் கொண்டு வந்திருந்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

ரூ.700 கோடி வருவாய் இழப்பு

இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை இன்று (நேற்று) மாலை 6 மணியில் இருந்து வருகிற 31-ந்தேதி வரை மூட உத்தரவிட்டு உள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 5 ஆயிரத்து 299 கடைகள் மூடப்பட்டு உள்ளன. மீண்டும் ஏப்ரல் 1-ந்தேதி பகல் 12 மணிக்கு திறக்க தற்போது திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கு பிறகு வேறு அறிவிப்புகள் வந்தால் அதற்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.

கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.28 ஆயிரத்து 989 கோடி வருவாய் கிடைத்தது. கடைகள் மூடுவதால் 1 நாளைக்கு ரூ.100 கோடி வீதம் 7 நாட்களுக்கு ரூ.700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் விற்பனையாகி உள்ளது. ஓரிரு நாட்கள் மூடுவது தான் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது 7 நாட்கள் மூடப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story