ஊட்டி, கோத்தகிரி, குன்னூரில் கொய்மலர் விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
ஊட்டி, கோத்தகிரி, குன்னூரில் கொய்மலர் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி,
நீலகிரியில் பச்சை தேயிலைக்கு கடந்த பல ஆண்டுகளாக விலை வீழ்ச்சி ஏற்பட்டு வந்ததால், தேயிலைக்கு மாற்று பயிராக, கொய்மலர் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு உள்ளனர். இதில், கொய்மலர் குடில்கள் அமைக்கவும் விவசாயம் மேற்கொள்ளவும் தமிழக அரசு 50 சதவீதம் வரை மானியம் வழங்கி விவசாயிகளை ஊக்குவித்து வந்தது. தொடக்கத்தில் போதுமான லாபம் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது வெளியூர்களுக்கு கொய்மலர்கள் அனுப்பி வைக்க முடியாத நிலை உள்ளதாலும், விற்பனை குறைந்து வருவதாலும் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குன்னூர், கோத்தகிரி, ஊட்டி பகுதியில் விவசாயிகள், கொய் மலர்களை சாகுபடி செய்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கொரோனா வைரஸ் எதிரொலியாக, சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன. இதனால், கொய்மலர் விற்பனை சரிந்து, கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். ஒரு லில்லியம் மலருக்கு கடந்த மாதம், 24 ரூபாய் வரை விலை கிடைத்தது. ஆனால் தற்போது, பாதியாக குறைந்து, 12 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. கார்னேசன், 8 ரூபாயில் இருந்து, ஒரு ரூபாயாக குறைந்துள்ளது. கடும் வீழ்ச்சியின் காரணமாக விவசாயிகள், கொய் மலர்களை அறுவடை செய்யவில்லை.
இதுகுறித்து கோத்தகிரி கெரடா பகுதியை சேர்ந்த விவசாயி பெள்ளி கூறுகையில்,கொரோனா காரணமாக, சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளன. பெரியளவில் சுப நிகழ்ச்சிகள் நடப் பதில்லை. கடந்த மாதம் வரை, உள்ளூரிலேயே, 300 ‘பன்ச்‘ விற்பனையான கொய்மலர், தற்போது, கொள்முதல் செய்ய ஆள் இல்லாமல், தேக்கமடைந்துள்ளன. இதனால், கொய்மலரை பறிக்காமல் விட்டுள்ளோம். அதனால் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டுள்ளது, என்றார்.
Related Tags :
Next Story