கள்ளச்சந்தையில் விற்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.14 கோடி முக கவசங்கள் பறிமுதல்
கள்ளச்சந்தையில் விற்க பதுக்கிவைக்கப்பட்டு இருந்த ரூ.14 கோடி முக கவசங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மும்பை,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் கடைகளில் முக கவசங்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். உள்துறை மந்திரி அனில்தேஷ் முக் கூட கடந்த 2 நாட்களுக்கு முன் கடைகளில் முக கவசங்கள் கிடைப்பதில்லை என கூறியிருந்தார்.
இந்தநிலையில் மும்பை, சகார் கார்கோ பகுதியில் முககவசங்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள குடோன்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்குள்ள குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 25 லட்சம் முக கவசங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.14 கோடி ஆகும். இதையடுத்து போலீசார் முக கவசங்களை பதுக்கி வைத்திருந்ததாக 4 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க இந்த முக கவசங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story