கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: வெறிச்சோடிய பஸ் நிலையம்
144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே தேனியில் கடை வீதிகள் மற்றும் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
தேனி,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் நேற்று மாலை 6 மணியில் இருந்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தேனியில் கடைவீதிகள், பஸ் நிலையங்களில் நேற்று முன்தினம் கூட்டம் அலைமோதியது. நேற்று பகலில் தேனி மாவட்டத்தில் கடை வீதிகள், பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பிற்பகலில் கடைவீதிகளில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டன. மாலை 6 மணியில் இருந்து 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று அறிவித்த போதும், பிற்பகலிலேயே வியாபாரிகள் பலரும் கடையை அடைத்து விட்டனர். இதனால், பிற்பகலில் கடை வீதிகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பகல் நேரத்தில் மதுரை சாலை, பெரியகுளம் சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்தது. இதனால், வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.
தேனி பழைய பஸ் நிலையம், கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் காலை நேரத்தில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஆனால், பிற்பகலில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. நெல்லை, நாகர்கோவில், கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு பிற்பகல் 3.30 மணியளவில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு மாலை 5.30 மணி வரை பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் மாலை 6 மணிக்கு முன்பே பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான மக்கள் கொரோனா வைரசுக்கு பயந்து நேற்று முன்தினமே சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால், நேற்று பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story