மாவட்ட செய்திகள்

நெல்லை மார்க்கெட்டில் 2-வது நாளாக குவிந்த பொதுமக்கள் + "||" + Tirunelveli Focused on the 2nd day of marketing The public

நெல்லை மார்க்கெட்டில் 2-வது நாளாக குவிந்த பொதுமக்கள்

நெல்லை மார்க்கெட்டில் 2-வது நாளாக குவிந்த பொதுமக்கள்
நெல்லை மார்க்கெட்டில் 2-வது நாளாக காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் 3 மீட்டர் இடைவெளியில் நின்று காய்கறிகள் வாங்கி சென்றனர்.
நெல்லை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 144 தடை உத்தரவும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் நெல்லை டவுன் போஸ் மார்க்கெட், பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

நேற்று 2-வது நாளாக கூட்டம் அலைமோதியது. அதிகாலை 6 மணி முதல் 9 மணி வரை கூட்டம் இருந்தது. வழக்கத்தை விட அதிகமாக காய்கறிகள் வந்தன. சில கடைகளில் அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. இங்கு மொத்தமாக கூடுவதை தவிர்க்க ஒவ்வொரு நபருக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் வட்டமிடப்பட்டு இருந்தது. சிலர் அந்த வட்டத்துக்குள் நின்று காய்கறிகளை வாங்கி சென்றனர். சிலர் முண்டியடித்து சென்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

நெல்லை டவுன் மார்க்கெட், பாளையங்கோட்டை மார்க்கெட்டில் காய்கறிகள், பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு சோப்பு ஆயில் கொடுத்து கைகளை கழுவும்படி மாநகராட்சி ஊழியர்கள் அறிவுறுத்தினர். மேலும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டுபிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது. பாளையங்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க காலை 6 மணிக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 8-30 மணிக்குள் அனைத்து காய்கறிகளும் விற்று தீர்ந்து விட்டன.

நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் லோடு ஆட்டோ மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் குவிந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள்.