ஊரடங்கு உத்தரவால் சிக்க மாட்டோம் என நினைத்து இளம்பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர்கள் - பொதுமக்கள் மடக்கிப்பிடித்து அடி-உதை
ஊரடங்கு உத்தரவால் சிக்க மாட்டோம் என நினைத்து இளம்பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பூந்தமல்லி,
மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி(வயது 25). இவர், வீட்டின் அருகே நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், அஞ்சலியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்தனர். சுதாரித்துக்கொண்ட அஞ்சலி, சங்கிலியை பறித்த வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்து திருடன் திருடன் என கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர், வாலிபர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து அடித்து உதைத்தனர்.
பின்னர் மாங்காடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருவேற்காட்டை சேர்ந்த சதீஷ்(25), அவருடைய நண்பர் அஜித்(22) என்பதும், தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்காது.
இதனால் தனியாக நடந்து செல்பவர்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டால் யாரிடமும் சிக்க மாட்டோம் என நினைத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story