144 தடை உத்தரவு: விதிகளை மீறினால் 6 மாதம் சிறை - சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


144 தடை உத்தரவு: விதிகளை மீறினால் 6 மாதம் சிறை - சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 March 2020 11:15 PM GMT (Updated: 25 March 2020 11:02 PM GMT)

சென்னை மாநகராட்சியில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 6 மாதம் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

144 ஊரடங்கு உத்தரவை கண்காணிக்கும் வகையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும், மண்டலத்திற்கு தலா 2 பறக்கும் படை குழுக்கள் வீதம் 30 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் சென்னை முழுவதும் நான்கு சக்கர வாகனங்களில் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபடுவர். இந்தக் குழுவில் மாநகராட்சி அலுவலர், வருவாய்துறை அலுவலர், போலீசார் ஆகிய 3 நபர்கள் உள்ளனர். இந்த குழுக்களை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.

இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். இந்த 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த குழுவிற்கு அதிகாரம் உள்ளது. விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அதிகபட்ச தண்டனையாக 6 மாத காலம் வரை சிறை தண்டனை வழங்குவதற்கான அதிகாரமும் இந்த குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டு கண்காணிப்பில் உள்ள நோயாளிகளை முழுமையாக கண்காணிப்பதற்கும், நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகளை இக்குழுக்கள் மேற்கொள்ளும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். உணவுத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரிசி, பருப்பு மளிகைப் பொருட்கள் வீடுகளில் சென்று வினியோகம் செய்வதற்கான அனுமதியை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை வழங்க முன்வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சென்னை மாநகராட்சியை அணுகலாம். தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு உபகரணங்களான முககவசம் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தனியார் தொண்டு நிறுவனங்கள் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் வங்கி கணக்குகள் மூலம் நிவாரண நிதிகளை செலுத்தலாம். சென்னையில் 407 அம்மா உணவகங்கள் தங்குதடையின்றி இயங்கி வருகிறது. மேற்கொண்டு உணவு தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பான முறையில் சமையல் செய்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் வெளியூர் செல்ல இருந்த 1,727 பயணிகள் மாநகராட்சியின் சமுதாய நலக்கூடங்களிலும், சென்னையில் வீடற்றோர் ஏற்கனவே 1,454 நபர்களும், தற்போது கூடுதலாக 610 நபர்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 64 பேர் மாநகராட்சி காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story