ஊரடங்கு உத்தரவு: மக்கள் நடமாட்டமின்றி கோவை நகரம் வெறிச்சோடியது


ஊரடங்கு உத்தரவு: மக்கள் நடமாட்டமின்றி கோவை நகரம் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 26 March 2020 3:30 AM IST (Updated: 26 March 2020 7:24 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவால் கோவை நகரம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.

கோவை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவையடுத்து கோவையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் அனைத்தும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டதால் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையங்கள் வெறிச்சோடின.

முக்கிய வீதிகளான ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி, ராஜ வீதி, திருச்சி ரோடு, நஞ்சப்பா ரோடு, கிராஸ்கட் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, 100 அடி ரோடு ஆகிய பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது. ஆட்டோக்கள் ஓடவில்லை. இருசக்கர வாகனங்கள், கார்களில் சொந்த பணிக்காக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

காரில் சென்றவர்களிடம் முக்கிய தேவைகள் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை அடையாள அட்டைகளை காண்பித்த பின்னர் அத்தியாவசிய பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டனர்.கோவை மக்கள் தினசரி நடை பயிற்சி மேற்கொள்ளும் ரேஸ்கோர்ஸ் பகுதியும் தடை உத்தரவு காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது. தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி கலக்கப்பட்ட தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தினர். புறநகர் பகுதிகளில் ஆள் நடமாட்டம் காணப்பட்டது. நடை பயிற்சிக்கு செல்வது போன்றவை தொடர்ந்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.தொழில் நகரமான கோவையில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கிரைண்டர் தயாரிப்பு மையங்கள், மோட்டார் பம்ப் உற்பத்தி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இவை அனைத்தும் மூடப்பட்டன.

தொழிலாளர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.முழு அடைப்பின்போது காலை முதல் மாலை வரை நகரம் வெறிச்சோடி இருக்கும். ஆனால் 24 மணிநேரமும் வெறிச்சோடி கிடக்கும் காட்சி இதுவே முதல்முறை என்று தொழில் அதிபர்களும், வியாபாரிகளும் தெரிவித்தனர்.

Next Story