தடை உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றியவர்களை விரட்டியடித்த போலீசார் - இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்தனர்
கோவையில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றியவர்களை போலீசார் விரட்டியடித்தனர். அதுபோல் இ்ளைஞர்களை தோப்புக்கரணமும் போட வைத்தனர்.
கோவை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன.
வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் சாலையில் சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல இளைஞர்கள் பலர் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தனர்.
குறிப்பாக சிங்காநல்லூர், காந்திபுரம், தடாகம் சாலை, அவினாசி சாலையில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து போலீசார் சாலையில் சுற்றியவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
சரியான காரணத்தை சொன்னவர்களை போலீசார் விட்டனர். ஆனால் முன்னுக்கு பின் முரணான பதிலை சொல்லிய இளைஞர்களை தடியடி நடத்தி விரட்டினார்கள். கார்கள், ஆட்டோ, லாரியில் வந்தவர்களையும் போலீசார் அடித்து துரத்தினார்கள்.
நேற்று மாலையில் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவரிடம் விசாரித்தபோது வீட்டில் பொழுதுபோகாததால் குழந்தையுடன் வெளியே வந்ததாக கூறினார். இதையடுத்து அந்த நபரை போலீசார் கம்பால் அடித்து துரத்திவிட்டனர்.
கோவை கணபதியில் இருசக்கர வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் சிலர் சரியான காரணத்தை சொல்லவில்லை.
இதையடுத்து போலீசார் அவர்கள் அனைவரையும் 100 தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டனை கொடுத்தனர். இதையடுத்து சாலையில் சுற்றித்திரியும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்தது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, வீட்டிற்கு தேவையான பொருட்கள் அருகில் உள்ள மளிகை கடையிலேயே கிடைக்கும். ஆனால் இளைஞர்கள் பலர் தேவையில்லாமல் சாலையில் சுற்றித்திரிகிறார்கள்.
யாராவது தேவையில்லாமல் சாலையில் வாகனங்களில் சுற்றித்திரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story