திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை
திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளுக்கு போலீசார் நூதன தண்டனை விதித்தனர்.
திருப்பூர்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ், ஆட்டோ, ரெயில் உள்ளிட்ட சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
இதுபோல் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்துவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டங்களுக்கு செல்லவும் முடியாது. எனவே பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அத்தியாவசிய தேவைகள் இன்றி பலர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அங்கும், இங்குமாக நேற்று காலை சுற்றித்திரிந்தனர். இந்த வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் வகையில் திருப்பூர் காலேஜ் ரோடு, புஷ்பா ஜங்சன், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் பணியில் இருந்தனர்.
இதற்கிடையே தேவைகள் இன்றி மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வெளியே பயணம் மேற்கொண்ட வாகன ஓட்டிகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்களை வீட்டிற்கு செல்லுமாறு எச்சரித்து போலீசார் அனுப்பினார்கள். இதனால் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு சென்றனர். ஒரு சில இடங்களில் அவசர பணிகளுக்காக வந்தவர்களை மட்டுமே போலீசார் அனுமதித்தார்கள்.
அந்த வகையில் திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியும், தேவையற்ற வகையில் வாகனங்களில் சுற்றி வந்த வாகன ஓட்டிகள் சிலரை போலீசார் பிடித்தனர். தொடர்ந்து அவர்களை நாற்காலி போல் சில நிமிடம் அமரவைத்து நூதன தண்டனை வழங்கினர்.
இதுபோல் திருப்பூர் பங்களா பஸ் ஸ்டாப்பிலும் வாகனத்தில் வந்த 2 பேரை போலீசார் விரட்டி அடித்துள்ளனர். இந்த காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story