கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை காமராஜர் மார்க்கெட் நாளை முதல் 3 நாட்கள் அடைப்பு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை காமராஜர் மார்க்கெட் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் அடைக்கப்படுகிறது.
தஞ்சாவூர்,
தஞ்சை-புதுக்கோட்டை சாலை காவேரி நகரில் தற்காலிக காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் தினமும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை செயல்படும். பொதுமக்கள் எந்த நேரமும் இங்கு சென்று காய்கறிகளை வாங்குவர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த மார்க்கெட் தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டு அதன்படி தற்போது செயல்பட்டு வருகிறது. தினமும் மார்க்கெட் திறந்து இருப்பதால் மக்கள் காய்கறிகளை வாங்குவதற்காக அதிக அளவில் வந்து செல்கின்றனர். நேற்று காய்கறி வாங்குவதற்காக பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர். இவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் யாரும் முன்னெச்சரிக்கையாக முக கவசம் எதுவும் அணியவில்லை.
இந்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், செயற்பொறியாளர் ராஜகுமாரன் ஆகியோர் காமராஜ் மார்க்கெட்டிற்கு நேற்று நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது காய்கறி வாங்க வந்தவர்களில் பலர், முக கவசம் அணியாததை பார்த்த அவர்கள், இவர்களில் யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது என எண்ணினர்.
உடனே வியாபாரிகளிடம் இப்படி மக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், மார்க்கெட்டை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அதிகாரிகள் கூறினர். மேலும் அவர்கள், மக்களிடம் என்னதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அவர்கள் அலட்சியமாக இருக்கின்றனர். எனவே நீங்கள்(வியாபாரிகள்) மக்கள் கூடுவதை தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்ய முன்வர வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூட மார்க்கெட்டை திறக்கலாம் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது காய்கறி மார்க்கெட்டிற்கு வரும் மக்கள் மூலமாக யாருக்கும் வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு 3 நாட்கள் மார்க்கெட்டை அடைக்க முடிவு செய்தனர். அதன்படி இன்று(வியாழக்கிழமை) வழக்கம்போல் அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை மார்க்கெட் செயல் படும். நாளை(வெள்ளிக் கிழமை) முதல் வருகிற 29-ந் தேதி வரை 3 நாட்கள் மார்க்கெட் அடைக்கப்படுகிறது. வருகிற 30-ந் தேதி வழக்கம்போல் செயல்படும்.
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டும் மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியமாக மார்க்கெட்டிற்கு வருவதை பார்த்து அதிகாரிகள் மிகவும் கவலைப்பட்டனர். மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் 3 நாட்கள் மார்க்கெட் அடைக்கப்படும். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 30-ந் தேதி முடிவு செய்யப்படும் என்றனர்.
Related Tags :
Next Story