ஊரடங்கு உத்தரவை மீறி சேலத்தில் சாலைகளில் நடமாடினால் ஓராண்டு சிறை - போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை
சேலத்தில் 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் சாலைகளில் நடமாடினால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மாநகர போலீஸ் துணை கமிஷனர் செந்தில் எச்சரிக்கை செய்துள்ளார்.
சேலம்,
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அனைத்து பகுதிகளிலும் டீக்கடை, சிறிய மளிகை கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரியும் நபர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
சேலம் மாநகரில் நேற்று முக்கிய சாலைகள் முழுவதும் அடைக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து அந்த வழியாக வந்த மொபட், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களிடம் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் யாரும் வெளியில் நடமாடக்கூடாது என்று எச்சரிக்கை செய்து திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும், போலீஸ் துணை கமிஷனர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோர் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களுக்கு தனித்தனியாக சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து துணை கமிஷனர் செந்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக தமிழக அரசின் உத்தரவை சேலம் மாநகரில் தீவிரமாக கடைபிடித்து வருகிறோம். போலீஸ் கமிஷனரின் அறிவுரைப்படி பிரதான சாலைகளில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்லாத வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளை தவிர மக்கள் யாரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.
கொரோனா வைரஸ் தாக்கம் மின்னல் வேகத்தில் பரவி வருவதால் பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறி சேலம் மாநகரில் சாலைகளில் நடமாடினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழக்குப்பதிவு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்படும். எனவே, கொரோனா வைரசின் தாக்கத்தை புரிந்து கொண்டு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story