கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரம்


கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 26 March 2020 10:31 AM IST (Updated: 26 March 2020 10:31 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

தா.பழூர், 

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளிலும் கொரோனா பாதித்தவர்களை கண்டறிய வீடு வீடாக அதிகாரிகள் குழு சோதனை செய்து வருகிறார்கள். தா.பழூர் வட்டார மருத்துவ அதிகாரி தட்சிணாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) பஞ்சாபகேசன், வட்டார ஊராட்சி ஜாகிர் உசேன் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் ஏற்படுத்தி வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வருபவர்களையும் மற்றும் சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு மாவட்டங்களில் இருந்து வேலை செய்துவிட்டு கொரோனா பீதி காரணமாக சொந்த ஊர் திரும்பியவர்களையும் தேடி அடையாளம் கண்டு வருகின்றனர்.

மேலும் அவர்களது வீட்டில் முழுமையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களை 14 நாட்கள் தனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் முகப்பில் தனிமை படுத்தப்பட்ட வீடு என்ற எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

மாநில அரசின் 144 தடை உத்தரவு மற்றும் மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். மளிகை கடைகள், காய்கறி கடைகள், பால் கடைகள், மருந்து கடைகள், இறைச்சி கடைகள் திறந்திருந்தன. ஊராட்சி மன்ற நிர்வாகங்கள் முழு வீச்சில் தூய்மை படுத்தும் பணிகளை செய்து வருகின்றனர். தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அவசியமில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்தவர்களை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுரை வழங்கினர்.

இது தவிர கிராம நிர்வாக அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் அவரவர்கள் பகுதியில் வேலைக்காக வெளியே சென்று சொந்த ஊர் திரும்பியவர்களை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஒரே ஒரு நபருக்கு மட்டும் சாதாரண சளி, இருமல் இருந்தபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் அரியலூர் கொரோனா பரிசோதனை முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

Next Story