ஆர்.எம்.எஸ்.அலுவலகம் மூடல்: திருச்சி ஜங்ஷனில் மூட்டை, மூட்டையாக தேங்கி கிடக்கும் தபால்கள்


ஆர்.எம்.எஸ்.அலுவலகம் மூடல்: திருச்சி ஜங்ஷனில் மூட்டை, மூட்டையாக தேங்கி கிடக்கும் தபால்கள்
x
தினத்தந்தி 26 March 2020 10:59 AM IST (Updated: 26 March 2020 10:59 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஜங்ஷனில் ஆர்.எம்.எஸ். அலுவலகம் மூடப்பட்டதால் மூட்டை, மூட்டையாக தபால்கள் தேங்கி கிடக்கின்றன.

திருச்சி, 

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில் மெயில் சர்வீஸ் (ஆர்.எம்.எஸ்.) அலுவலகம் உள்ளது. இதில் இருந்து தபால் துறையின் தபால்கள் அனைத்தும் வெளியூர்களுக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவினால் ஆர்.எம்.எஸ். அலுவலகம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மூடப்பட்டது. ஏற்கனவே ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் தபால்கள் பல தேங்கி கிடந்தன. ஒரு சில ஊழியர்கள் மட்டும் பணியில் இருந்தனர். ஆனால், ஊரடங்கு உத்தரவின் மூலம் அந்த ஊழியர்களையும் பணிக்கு வர வேண்டாம் என துறை அதிகாரிகள் கூறியதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆர்.எம்.எஸ். வளாகத்தில் ஆங்காங்கே மூட்டை, மூட்டையாக குவிந்து கிடந்த தபால்களை மொத்தமாக அலுவலகத்தின் உள்ளே போட்டு அடைத்தனர். மேலும் ஆர்.எம்.எஸ். அலுவலத்தை பூட்டு போட்டு பூட்டினர்.

இதுகுறித்து ஆர்.எம்.எஸ். அலுவலக ஊழியர்களிடம் கேட்டபோது, “ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் தபால்களை பிரித்து வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் இருந்தது. இருப்பினும் தபால்களை வகைப்படுத்தி பிரித்து வைத்திருந்தோம். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அலுவலகத்தை மூட அறிவுறுத்தப்பட்டன. ஊழியர்கள் யாரும் பணிக்கு வரப்போவதில்லை. அவசர தேவைக்காக ஒரு சில ஊழியர்கள் கூட பணிக்கு வர வேண்டாம் என கூறப்பட்டு விட்டது. மறு உத்தரவு வரும் வரை இந்த நிலை தொடரும்” என்றார்.

மூடப்பட்ட ஆர்.எம்.எஸ். அலுவலகத்தின் உள்ளே தபால்கள் மூட்டை, மூட்டையாக தேங்கி கிடக்கிறது. இதில் அரசு மற்றும் தனியார் துறையின் தபால்கள் ஏராளமாக இருக்கலாம். முக்கியமான தபால்கள் கூட இருக்கலாம். ரெயில்கள் இயக்கப்படும் போது அலுவலகம் திறந்த பின் அந்தந்த ஊர்களுக்கு தபால்கள் அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு சம்பந்தப்பட்ட நபர்களின் கைகளுக்கு சென்றடையும் என்று கூறப்படுகிறது. 

Next Story