அரசு ஊழியர்கள் பயன்படுத்த முகக்கவசம் தயாரிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர் தீவிரம்
அரசு ஊழியர்கள் பயன்படுத்த முகக்கவசம் தயாரிக்கும் பணியில் மகளிர் சுய உதவி குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாதாரண முகக்கவசங்கள் கூட ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதைத்தொடர்ந்து முகக் கவசம் தயாரிக்கும் பணியில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களை ஈடுபடுத்த அரசு திட்டமிட்டது. அவர்களைக் கொண்டு சுமார் ஒரு லட்சம் அளவுக்கு முகக் கவசம் தயாரிக்கப்பட உள்ளது.
தற்போது இந்த பணி தீவிரமாக நடந்து வருகிறது. சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களே கடைகளில் துணி வாங்கி அரசுக்கு முகக்கவசம் தைத்து கொடுக்கின்றனர்.
இதுதொடர்பாக கருவடிக்குப்பம் வசந்தம் ஸ்ரீகலைவாணி மகளிர் சுய உதவி குழுவின் தலைவி சரஸ்வதி கூறியதாவது:-
அரசின் வேண்டுகோளுக்கிணங்க நாங்கள் முகக்கவசம் தைத்து கொடுக்கிறோம். ஒரு மீட்டர் துணியில் 5 அல்லது 6 முகக்கவசம் தைக்கப்படுகிறது. இதற்கான துணிக்கு மட்டுமே மீட்டருக்கு ரூ.95 செலவாகிறது.
லாபநோக்குடன் அல்லாமல் சேவை மனப்பான்மையுடன் இதை செய்து கொடுக்கிறோம். தற்போது நகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தும் முகக்கவசங்கள் நாங்கள் தயாரித்து கொடுத்ததுதான். இதனை பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் எங்களிடம் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதுவரை சுமார் 3 ஆயிரம் முகக்கவசங்களை தயாரித்து கொடுத்துள்ளோம்.
இந்த முகக்கவசத்தை சலவை செய்து மீண்டும் பயன்படுத்தலாம். கண்டிப்பாக அதை தேய்த்துதான் பயன் படுத்த வேண்டும். ஏனெனில் அதனை சூடு படுத்தும்போது அதிலுள்ள கிருமிகள் செத்துவிடும்.
இவ்வாறு சரஸ்வதி கூறினார்.
Related Tags :
Next Story