கோவில்பட்டி- ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் - தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பு


கோவில்பட்டி- ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் - தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 26 March 2020 10:00 PM GMT (Updated: 26 March 2020 5:30 PM GMT)

கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம்,

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி ஸ்ரீவைகுண்டத்தில் பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி வளாகம், அரசு போக்குரவத்து கழக பணிமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதற்காக தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி தலைமையில் தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனத்தில் கிருமிநாசினி கலந்த தண்ணீரை நிரப்பி, அதனை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சென்று பீய்ச்சி அடித்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளை நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் முருகன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

திருச்செந்தூர்

இதேபோன்று திருச்செந்தூரில் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கோபால் தலைமையில், துப்புரவு பணியாளர்கள் கிருமிநாசினி கலந்த தண்ணீரை டேங்கர் லாரியில் நிரப்பி, அதனை அனைத்து சாலைகள், தெருக்களிலும் பீய்ச்சி அடித்து தூய்மை செய்தனர். வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் திருச்செந்தூருக்கு வந்தவர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்கள், குறிப்பிட்ட நாட்கள் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தும் வகையில், அவர்களது கைகளில் மையால் முத்திரை பதிக்கப்பட்டது.

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலைய வளாகத்தில் தங்கியிருந்த நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ஆழ்வார்திருநகரி முஸ்லிம் தெருவில் இளைஞர்கள் வேப்பிலை, மஞ்சளை அரைத்து தண்ணீரில் கலந்து, அதனை அனைத்து வீடுகளின் முன்பும் தெளித்தனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்தனர். இதையடுத்து தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முத்துராஜ் உள்ளிட்டவர்களிடம் நகரசபை ஆணையாளர் ராஜாராம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில், தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளை திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து மதியம் 2 மணி அளவில் தினசரி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டது. நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முழு நேரமும் தினசரி மார்க்கெட் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம், அத்தியாவசிய பணிக்கு செல்கிறவர்கள் மட்டுமே வெளியில் தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்றும், மற்றவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி செல்லுங்கள் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.

உடன்குடி

உடன்குடி பஸ் நிலையம், பஜார் மற்றும் அனைத்து தெருக்களிலும் டேங்கர் லாரியில் கிருமிநாசினி கலந்த தண்ணீரை நகர பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்கள் பீய்ச்சி அடித்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளை நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் மாணிக்கராஜா, வட்டார மருத்துவ அலுவலர் அனி பிரிமின், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அந்தந்த பகுதியில் உள்ள மளிகைக்கடைகளின் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

குலசேகரன்பட்டினத்தில் பஞ்சாயத்து தலைவி சொர்ணபிரியா துரை தலைமையில், அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சிறுநாடார்குடியிருப்பில் பஞ்சாயத்து தலைவி கமலம் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Next Story