வாடிக்கையாளர்கள் வராததால் கோவையில் வங்கிகள் வெறிச்சோடின - பணி நேரம் குறைப்பு


வாடிக்கையாளர்கள் வராததால் கோவையில் வங்கிகள் வெறிச்சோடின - பணி நேரம் குறைப்பு
x
தினத்தந்தி 27 March 2020 4:15 AM IST (Updated: 26 March 2020 11:57 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் வாடிக்கையாளர்கள் வராததால் வங்கிகள் வெறிச்சோடின. மேலும் வங்கிகளின் பணி நேரமும் காலை 10 மணி முதல் மதியம் 2 வரை குறைக்கப்பட்டுள்ளது.

கோவை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கோவையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மளிகை, காய்கறி, மற்றும் வங்கிகள் உள்பட அத்தியாவசிய தேவைக் கான அலுவலகங்கள் மட்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கிளையின் மொத்த பணியாளர்களில் 50 சதவீதம் பேரை கொண்டு ஒரு வாரம் பணியாற்றுமாறும், மீதி 50 சதவீதம் பேரை விடுமுறையில் இருக்குமாறும், விடுமுறையில் இருப்பவர்கள் அடுத்த வாரம் பணி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி கோவையில் உள்ள வங்கிகள் குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் வருவது மிகவும் குறைந்துவிட்டது. வங்கிகளுக்கு ஒரு சில வாடிக்கையாளர்கள் தான் வருகிறார்கள். இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். முக கவசம் இல்லையென்றால் கைக்குட்டையை முகத்தில் கட்டிய பின்னர் தான் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். வங்கிக்குள் செல்பவர்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவிய பின்னரே உள்ளே செல்ல முடியும்.

இதுகுறித்து வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

வங்கிகளில் நான்கு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் பணம் போட வந்தால் அவர்களின் பணத்தை வரவு வைப்பது, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க உதவுவது, காசோலைகள் கொண்டு வந்தால் அதை வங்கி கணக்கில் வரவு வைப்பது மற்றும் ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு ஆர்.டி.ஜி.எஸ்., மற்றும் நெப்ட் ஆகியவை செய்ய உதவும் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவையில் ஊரடங்கு உத்தரவால் சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கோவை அவினாசி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் போலீசார் தடுப்புகள் வைத்துள்ளனர்.

இதனால் அதில் வாகன போக்குவரத்து கிடையாது. இதே போல கோவை டவுன்ஹால் ஒப்பணக்கார வீதி, கோவை-மேட்டுப்பாளையம் சாலை உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story