பால், நாளிதழ்களை தடையில்லாமல் கொண்டு செல்ல நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் தகவல்


பால், நாளிதழ்களை தடையில்லாமல் கொண்டு செல்ல நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 27 March 2020 4:37 AM IST (Updated: 27 March 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

பால், நாளிதழ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தடையில்லாமல் மக்களிடம் கொண்டு செல்வது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை, 

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஆளில்லா குட்டிவிமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியின் சோதனை நிகழ்ச்சி நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த பணியை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவருடன் துணை கமிஷனர்கள் குமரவேல் பாண்டியன், மதுசுதன் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து கமிஷனர் கோ.பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரசை தடுக்கும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதிதான் கிருமி நாசினி தெளிக்கும் பணி. இந்த நிலையில் 144 தடை உத்தரவுக்கு பின்னர் சென்னையின் பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது.

இந்த ஆளில்லா குட்டி விமானங்கள்(டிரோன்கள்) அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கண்காணிப்பில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைகள், குடிசை மாற்று வாரிய பகுதிகள், கிருமி நாசினி தெளிக்கும் வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் கிருமி நாசினி அடிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்திடம் உள்ள இதேபோன்ற 4 ஆளில்லா குட்டி விமானங்களும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும்.

30 டாக்டர்கள்

தற்போது ரிப்பன் மாளிகையில் சோதனை அடிப்படையில் ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக சென்னையின் முக்கியமான இடங்களில் இந்த கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கப்படும். இந்த பணி மூலம் ஒரு நாளைக்கு 2 லட்சம் சதுர அடி வரை கிருமி நாசினி தெளிக்கப்படும்.

சுகாதார துறையின் அறிவுரையின்படி வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு திரும்பிய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாநகராட்சி, போலீஸ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருகிறது.

இதைப்போல் ரெயில்கள் மூலம் வெளிமாநிலங்களுக்கு செல்ல முடியாத 2 ஆயிரம் பேர் 20 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் கூட்டத்தை குறைக்கும் விதமாக இந்த 2 ஆயிரம் பேரை கூடுதல் முகாம் ஏற்படுத்தி தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் காரணமாக அனைவரும் அவரவர் வீடுகளில் இருந்து தனிமை படுத்தப்பட்டுள்ளவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் உடல்நலன் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். இதற் கான பணியில் 30 டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பால், நாளிதழ்கள்

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகளின் சந்தேகங்களை போக்க 10 டாக்டர்கள் பணியில் உள்ளனர்.

அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்களை வீட்டில் ‘டெலிவரி’ செய்ய எந்த தடையும் இல்லை. சமைக்கப்பட்ட உணவுகள் ஆன்-லைனில் விற்பனை செய்ய முழு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பால், நாளிதழ், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பல இடங்களுக்கு கொண்டு செல்வதில் எந்த தடையும் ஏற்படாமல் இருக்க பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் போலீஸ் கமிஷனரிடம் பேசியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story