பாளையங்கோட்டை மார்க்கெட்டில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க காய்கறி கடைகள் இடமாற்றம் - எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம்
நெல்லையில் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க மக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்க காய்கறி கடைகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பீதியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மூடப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்களான காய்கறி கடைகள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அங்கு கூட்டம், கூட்டமாக சென்று காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
பொதுமக்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து உள்ள இந்த நேரத்தில் காய்கறி மார்க்கெட்டு, கடைகளில் பொதுமக்கள் கூடுவதால் கொரனோ பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நெல்லை மாநகரில் உள்ள மார்க்கெட்டுகளில் உள்ள கடைகளை பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்து நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே உத்தரவிட்டார். அதன்படி பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி காந்தி மார்க்கெட்டு கடைகளை 3 இடங்களுக்கு மாற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முயன்றனர். ஆனால் வியாபாரிகள் அங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறினர். இதையடுத்து போலீசார் மார்க்கெட் கதவுகளை மூடி சீல் வைத்தனர். இதை கண்டித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் தங்களது கடைகளை அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பு காலி இடத்துக்்்கு இடமாற்றினர். இதேபோல் நேருஜி கலையரங்க திடல் மற்றும் வ.உ.சி. மைதானத்துக்கும் இங்குள்ள கடைகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையும் இடமாற்றம் செய்யப்பட்டது. அருகில் உள்ள போக்குவரத்து பூங்காவுக்கு 50 கடைகளும், ரெயில்வே தண்டவாளம் அருகில் உள்ள சிறுவர் பூங்காவுக்கு 35 கடைகளும் இடமாற்றம் செய்யப்பட்டன. அங்கு பொதுமக்கள் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்த வட்டத்தில் நின்று காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.
இதேபோல் மேலப்பாளையம் உழவர் சந்தையில் இருந்த கடைகள் மாநகராட்சி திருமண மண்டபத்துக்கும், தரை அமர்வு கடைகள் சந்தைமுக்கு ரவுண்டானா அருகிலும் மாற்றம் செய்யப்பட்டன. அங்கு பொதுமக்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நின்று காய்கறிகள் வாங்கிச்சென்றனர். பொதுமக்கள் இடைவெளி விட்டு நிற்பதற்கு ஏதுவாக வட்டம் போடப்பட்டிருந்தது. இதுதவிர டவுன் போஸ் மார்க்கெட்டை அங்குள்ள கடைகளை பொருட்காட்சி திடலுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நெல்லை மாநகரில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், டீக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் அதை மீறி ஆங்காங்கே ஒருசில கடைகள் இயங்கி வந்தன. அவற்றை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் நேற்று ஒரு டீக்கடை செயல்பட்டு வந்தது. இதை அறிந்த மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் சம்பந்தப்பட்ட கடையை மூட உத்தரவிட்டார். இதையொட்டி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகி பிரேமலதா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story