வங்கிகள், மருந்தகங்களில் 1 மீட்டர் இடைவெளி விட்டு பொதுமக்கள் நிற்க ஏற்பாடு


வங்கிகள், மருந்தகங்களில் 1 மீட்டர் இடைவெளி விட்டு பொதுமக்கள் நிற்க ஏற்பாடு
x
தினத்தந்தி 26 March 2020 10:00 PM GMT (Updated: 27 March 2020 2:33 AM GMT)

வங்கிகள், மருந்தகங்களில் 1 மீட்டர் இடைவெளி விட்டு பொதுமக்கள் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் விதமாக மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் இருந்து வங்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகள் அனைத்தும் முழு நேரமாக இயங்காமல் மதியம் 2 மணி வரை இயங்கும் என்றும் ஏ.டி.எம். மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் நேற்று முதல் மதியம் 2 மணி வரை இயங்கின. இந்த வங்கிகளில் குறைந்த அளவே ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அவர்களும் முககவசம், கையுறை அணிந்தபடி பாதுகாப்பாக பணியில் ஈடுபட்டனர். வழக்கம்போல் பணம் டெபாசிட் செய்தல், ஒரு வங்கியில் இருந்து அதே வங்கி மட்டுமின்றி மற்றொரு வங்கிக்கு பண பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை மற்றும் அரசு சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள் பரிவர்த்தனையும் வழக்கம்போல் நடைபெற்றன.

மேலும் வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வங்கியின் வளாகத்திலேயே நிறுத்தப்பட்டு அவர்களை 1 மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக நிற்க வைத்து அவர்கள் டெபாசிட் செய்யும் பணம் 40 ஆயிரத்திற்கு குறைவாக இருந்தால் அதை வங்கி ஊழியரே வாங்கி பணம் கட்டி அதற்கான ரசீதை வாடிக்கையாளரிடம் கொடுக்கவும், ரூ.40 ஆயிரத்திற்கு மேல் டெபாசிட் செய்ய வருபவர்களை வங்கியின் நுழைவுவாயிலில் கிருமி நாசினி மூலம் கைகளை தேய்த்து சுத்தம் செய்த பின்னர் உள்ளே அனுமதித்து அவர்களே நேரடியாக பணம் டெபாசிட் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

இதேபோல் மருந்து கடைகளிலும் மருந்து வாங்க வருபவர்களை 1 மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக நின்று மருந்துகளை வாங்கிச்செல்லவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

Next Story