கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் காய்கறி கடைகளுக்கு அனுமதி மறுப்பு
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் காய்கறி கடைகள் வைக்க அனுமதி அளிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உழவர்சந்தை மூடப்பட்டு உள்ளதால், அதன் எதிரே உள்ள சுந்தரவிநாயகர் கோவில் தெரு மற்றும் துருகம் சாலையோரத்தில் விவசாயிகள் கடை விரித்து காய்கறி வியாபாரம் செய்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதனால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக பஸ் நிலையம் காலியாக உள்ளதால், அங்கு போதிய இடைவெளியுடன் அதாவது 2 மீட்டர் இடைவெளிக்கு ஒரு கடை வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி காலியாக இருந்த பஸ் நிலையத்தில் விவசாயிகள் காய்கறிகளை குவித்து வைத்து வியாபாரம் செய்தனர். இந்த கடைகள் காலை 6 மணி முதல் 9 மணிவரை மட்டும் இயங்கியது. இதனால் ரெகுலர் காய்கறி மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் இல்லாமல் இருந்தது. காய்கறிகளின் விலையும் சற்று குறைந்திருந்தது.
இந்த நிலையில் நேற்று பஸ் நிலையத்துக்கு காய்கறிகள் கொண்டு வந்த விவசாயிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் பஸ் நிலையத்துக்குள் செல்லும் வழி முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் விவசாயிகள், பஸ் நிலையம் எதிரே கச்சேரி சாலையோரத்தில் காய்கறிகளை வைத்து விற்பனை செய்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசார், சாலையோரத்தில் அனுமதி இல்லை எனக்கூறி கடைகளை அப்புறப்படுத்தினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காய்கறிகள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். பின்னர் அனைத்து மக்களும் ரெகுலர் காய்கறி மார்க்கெட்டிற்கு சென்றதால் அங்கு சமூக இடைவெளி இல்லாமல் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதோடு மார்க்கெட்டில் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்தனர். இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் காலியாக உள்ளதால் 3 மீட்டர் இடைவெளிக்கு ஒரு கடை வைத்து வியாபாரம் செய்ய விவசாயிகளுக்கு அனுமதி அளித்தால் காய்கறிகள் விலையும் குறைவாக கிடைக்கும், கூட்ட நெரிசல் இல்லாமல் பொதுமக்களும் பாதுகாப்பாக காய்கறி வாங்கிச்செல்ல வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story