தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர் காய்ச்சலுக்கு மேலும் 14 பேர் அனுமதி


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர் காய்ச்சலுக்கு மேலும் 14 பேர் அனுமதி
x
தினத்தந்தி 26 March 2020 10:15 PM GMT (Updated: 27 March 2020 3:32 AM GMT)

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர் காய்ச்சலுக்கு மேலும் 14 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி காணப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் காரணமாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருபவர்கள் தனியாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இங்கு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், அருகிலுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

நேற்று முன்தினம் வரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 23 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் நேற்று 11 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் மேலும் 14 பேர் தொடர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மருத்துவமனை வளாகத்தில் சில நாட்களாக கைதெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தெளிப்பான்கள் மூலம் உயரமான இடங்களுக்கு தெளிக்க முடியாத நிலை இருந்தது. எனவே டிரோன் மூலம் நேற்று முன்தினம் மாலை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை மருத்துவமனை வளாகம் முழுவதும் 2-வது நாளாக டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த டிரோன் 5 நிமிடத்தில் 7 கி.மீ. சுற்றளவுக்கு கிருமி நாசினி தெளிக்கும் திறனுடையது. மருத்துவமனை வளாகத்தில் டிரோன் மூலம் கட்டிடங்களின் மேற்பரப்பு, தரைதளம் என அனைத்து பகுதிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story