மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 38 பேர் கைது - 2,781 மதுபாட்டில்கள் பறிமுதல்


மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 38 பேர் கைது - 2,781 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 March 2020 10:09 AM IST (Updated: 27 March 2020 10:09 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 38 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2,781 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. நாமக்கல் மாவட்டத்திலும் அனைத்து அரசு மதுபான கடைகளும் மூடப்பட்டு விட்டன. இதைதொடர்ந்து அரசின் உத்தரவை மீறி சந்துக்கடைகள் மற்றும் சாலையோரங்களில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை நடைபெறுகிறதா? என கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி கடந்த 2 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 38 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து 2,781 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் மதுபான பாட்டில்களை கடத்த பயன்படுத்திய 2 மொபட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பரமத்திவேலூர் அருகே பாலப்பட்டி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி மது பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீசார் பாலப்பட்டி பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது கீழ் பாலப்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் பன்னீர்செல்வம் (வயது 41) என்பவர் மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஆண்டவர் என்கிற ராஜலிங்கம் (54) என்பவர் வாங்கி வைத்த மதுபாட்டில்களை கனகராஜ் (37) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் விற்பனை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து பன்னீர்செல்வம், ராஜலிங்கம் மற்றும் கனகராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 262 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல சேந்தமங்கலம் பகுதியிலும் மது பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது காளப்பநாயக்கன்பட்டி ரெட்டி காலனியில் தமிழரசு (25) என்பவர் தன்னுடைய வீட்டில் மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ராசிபுரம் அருகே கவுண்டம்பாளையத்தில் மதுவிற்றதாக ஜெயவாணன் (26) என்பவரை ராசிபுரம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் பட்டணத்தில் மதுவிற்றதாக வேலு (32) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 144 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் 80 லிட்டர் கள், 41 லிட்டர் சாராய ஊறல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.

Next Story