தர்மபுரி மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சென்ற 66 பேர் கைது - 152 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்


தர்மபுரி மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சென்ற 66 பேர் கைது - 152 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 March 2020 10:09 AM IST (Updated: 27 March 2020 10:09 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி சாலைகளில் சென்ற 66 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 152 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தர்மபுரி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி சாலைகளில் வாகனங்களில் செல்லவும், நடமாடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் நடமாடுபவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தர்மபுரி நகரில் 4 ரோடு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு கலைக்கல்லூரி உள்பட முக்கிய இடங்களில் உள்ள சாலைகளில் தடுப்பு கட்டைகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாலைகளில் ஆம்புலன்சு வாகனங்கள், அத்தியாவசியமான சேவை பணிகளுக்கு செல்லும் வாகனங்கள் தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்த நிலையில் தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சென்ற 66 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.

இதேபோல் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சென்ற இருசக்கர வாகனங்கள், சாலையோரத்தில் தேவையின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 152 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story