2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு: கிருஷ்ணகிரியில் சாலைகளுக்கு ‘சீல்’ வைத்த போலீசார் - வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று ஊரடங்கு உத்தரவையொட்டி சாலைகளில் சுற்றிய வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் சாலைகளுக்கு ‘சீல்‘ வைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலைகளில் வாகன ஓட்டிகள் பலரும் சுற்றினார்கள். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சில இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் சில இடங்களில் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை சிறிது நேரம் நிறுத்தி பின்னர் அனுப்பினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 2-வது நாளான நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி 5 ரோடு, பெங்களூரு சாலை, ராயக்கோட்டை சாலை, புதிய பஸ் நிலையம் உள்பட பல இடங்களில் தடுப்பு கம்பிகள் வைத்து சாலைகளுக்கு ‘சீல்‘ வைத்தனர். மேலும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளின் அவர்களின் அவசியம் கருதி மட்டும் அனுப்பி வைத்தனர். மற்றவர்களை திருப்பி அனுப்பினார்கள். கிருஷ்ணகிரியில் வாலிபர்கள் சிலர் ஆங்காங்கே மோட்டார்சைக்கிள்களில் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து இனிமேல் இது போன்று சாலைகளில் சுற்ற மாட்டோம் எனக்கூற சொல்லி தோப்புக்கரணம் போட வைத்தனர். மாவட்டத்தில் மருந்து கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் மட்டும் திறந்திருந்தன. பொதுமக்கள் இடைவெளி விட்டு பொருட்கள் வாங்க அறிவுறுத்தப்பட்டனர். மாவட்டத்தில் பால் வினியோகம் வழக்கம் போல இருந்தது.
Related Tags :
Next Story