சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதித்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதித்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 27 March 2020 4:30 AM IST (Updated: 27 March 2020 10:09 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதித்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம்,

இந்தோனேசியாவில் இருந்து 11 முஸ்லிம் மதபோதகர்கள் கடந்த 11-ந் தேதி சேலத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் 22-ந் தேதி வரையில் சூரமங்கலம், செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம் பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு சென்று அங்கு தங்கியிருந்து மத போதனை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதுபற்றி அறிந்த மாவட்ட சுகாதாரத்துறையினர், இந்தோனேசியாவில் இருந்து வந்த 11 பேரையும், அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த சென்னையை சேர்ந்த ஒருவர் மற்றும் அவர்களுடன் இணைந்து சுற்றிய சேலம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 16 பேரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்பட்டதில், இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 4 பேர் மற்றும் சென்னையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட 5 பேரையும் கொரோனா தனிமைப்படுத்தும் (கோரன்டைன்) வார்டுக்கு மருத்துவர்கள் மாற்றினர். இவர்களுக்கு தனிமை வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு உள்ள 5 பேரும் தொடர் கண்காணிப்பில் இருப்பதால் அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன் கூறுகையில், இந்தோனேசியாவில் இருந்து சேலத்திற்கு வந்தவர்கள் உள்பட 16 பேர் தனிமை வார்டில் உள்ளனர். இதில், 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். அவர்களது உடல்நிலை சீராக இருப்பதால் விரைவில் குணமடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம், என்றார்.

இதற்கிடையே, மதபோதகர்கள் தங்கியிருந்த 5 மசூதிகள் அனைத்தும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு அங்கு லாரிகள் மூலம் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. சூரமங்கலம் 19-வது வார்டுக்கு உட்பட்ட ஆசாத் நகர், 1-வது வார்டு அண்ணா நகர், 31-வது வார்டில் கோட்டை மசூதி தெரு உள்பட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்தோனேசியா நாட்டில் இருந்து வந்த 11 பேருடன் தொடர்பில் இருந்தவர்களின் குடும்பத்தினர் என 200-க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களின் கைகளில் முத்திரை வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், அவர்கள் தங்கியுள்ள வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏதேனும் கொரோனா நோய் தொற்று அறிகுறி இருப்பது தெரிய வந்தால் உடனடியாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story