ஊரடங்கு உத்தரவை மீறி காய்கறி வினியோகம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது வழக்கு


ஊரடங்கு உத்தரவை மீறி காய்கறி வினியோகம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 March 2020 10:19 AM IST (Updated: 27 March 2020 10:19 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவை மீறி காய்கறி வினியோகம் செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவையிலும் தடை உத்தரவு கடுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தடை உத்தரவை மீறியதாக வியாபாரிகள், இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் என மாநிலம் முழுவதும் 58 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2-ம் நாளான நேற்று 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீதும், கடைகளை திறந்து வைத்து கூட்டத்தை கூட்டுபவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நெல்லித்தோப்பு பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று முன்தினம் இரவு பொதுமக்களை ஒரே இடத்துக்கு வரவழைத்து ஆளுங்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் மற்றும் அவரது அலுவலக ஊழியர் வேலு உள்ளிட்டோர் இலவசமாக காய்கறிகளை வழங்கினர். இதை வாங்க அங்கு 200க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் தகவல் பரவியது. அரசு அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் புகார் சென்றது. தடையை மீறி கும்பல் கும்பலாக பொதுமக்கள் நிற்பதை அங்கு ரோந்து பணியில் சென்ற போலீசாரும் உறுதி செய்தனர். இதையடுத்து உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று கூடி இருந்த பொதுமக்களிடம், தற்போது புதுவையில் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு உள்ளது. எனவே ஒன்று கூட வேண்டாம். கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்து அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

ஒரே இடத்தில் கும்பலை வரவழைத்து காய்கறிகளை வினியோகம் செய்தது பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளுக்கு முரணானது என்பதால் ஆளுங்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார், அவரது ஊழியர் வேலு மீது நோய் கிருமி பரவும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல், தடையை மீறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர். மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுகளை மீறியதற்காக எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.

இதேபோல் தடை உத்தரவை மீறியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

புதுவையில் தடை உத்தரவை மீறிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீதே போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். சட்டத்தை மீறுபவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் நடவடிக்கை உறுதி. 200-க்கும் மேற்பட்டோரை வீட்டின் முன்பு கூட்டி பொருட்கள் வினியோகம் செய்தது தொற்றுநோய் பரவுதல் தடுப்பு சட்டத்திற்கு எதிரானது. சட்டத்தை பின்பற்றாமல் அதனை மீறிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ. மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் ஒரு தெளிவான செய்தி. சட்டவிதிகளை கடைபிடிப்பது சட்டத்தை உருவாக்கியவர்களின் பெரிய பொறுப்பு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story