இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகன, ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் - கலெக்டர் எச்சரிக்கை


இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகன, ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 March 2020 4:15 AM IST (Updated: 27 March 2020 11:17 PM IST)
t-max-icont-min-icon

தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகன, ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். குறித்து மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர், 

வேலூர் பென்லேண்ட் மருத்துவமனை வேலூர் மாவட்டத்துக்கான கொரோனா மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவமும் 535 படுக்கைகள், 125 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் யாராவது வெளியே வந்தால் அதுகுறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அறிகுறிகள் தென்பட்ட 9 பேரிடம் இருந்து ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் 7 பேருக்கு தொற்று இல்லை. 2 பேருக்கு சோதனை முடிவு எதிர்பார்க்கப்படுகின்றன.

144 தடை உத்தரவை மீறி கார்கள், ஆட்டோக்கள் இயங்கினால் பறிமுதல் செய்யப்படும். அவற்றின் உரிமம் மற்றும் பதிவு ரத்து செய்யப்படும். மேலும் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிமமும் ரத்து செய்யப்பட்டு ஏலம் விடப்படும். ஓட்டுனர் உரிமமும் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

காய்கறி கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். மொத்த காய்கறி விற்பனை அங்காடி நேதாஜி மார்க்கெட்டில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டும் விற்பனை செய்யப்படும்.

மாவட்டத்தில் உழவர் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக தொரப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலும், காட்பாடி காந்திநகர் டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலும், குடியாத்தத்தில் செயல்பட்டு வந்த உழவர் சந்தையானது குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலும், பேரணாம்பட்டில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் பேரணாம்பட்டு கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலும் இன்று (சனிக்கிழமை) முதல் காலை 6 மணி முதல் 12 மணி வரை செயல்படும். பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று காய்கறிகள் வாங்கிச் செல்ல வேண்டும்.

கடைகளுக்கு ‘சீல்’ 


காய்கறி கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளுக்கு முன்பாக இடைவெளி விட்டு பொதுமக்கள் நிற்கும் வகையில் குறியீடுகள் வரைய வேண்டும். அவ்வாறு செய்யாமல் கடைகள் திறந்திருந்தால் கடைகள் ‘சீல்’ வைக்கப்படும். உரிமையாளர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசு, தனியார் மருத்துவமனை பணியாளர்கள்கள் அனைவரும் தவறாமல் தங்களது அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். தேவையில்லாமல் அதை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story