தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள்
தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
தென்காசி,
உலகமெங்கும் பரவலாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதையொட்டி தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்க்கவும், மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பெரிய காய்கறி மார்க்கெட்டுகள் இருக்கும் இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், காய்கறிகள், பழங்கள் விற்கும் கடைகள் மற்றும் மளிகை கடை, மருந்து கடைக்கு செல்லும் பொதுமக்கள் சமூக விலகல் என்ற அடிப்படையில் 3 அடி தூரம் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருந்தால் 2 வாரங்களுக்கு பிறகே அறிகுறிகள் தென்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் அறிகுறிகள் இல்லாத போதும் கூட பிறருக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட தனி மனிதர்களிடம் இருந்து நேரடி தொடர்பின் மூலம், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலம் பரவும். எனவே வெளிநாடு, அண்டை மாநிலங்களுக்கு சென்று திரும்பியவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்துவதன் மூலம் நோய் தொற்று மேலும் பிறருக்கு பரவாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
கடந்த 1–ந்தேதிக்கு பிறகு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தென்காசி மாவட்டத்துக்கு வந்துள்ள அனைவரும், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு தொலைபேசி எண் 04633–290548 எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தங்களை சுய தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் தவிர மற்ற யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
வீட்டில் அனைவரும் நன்றாக கைகளை கழுவ வேண்டும். வெளி நபர்கள் வீட்டுக்கு வருவதை தடுக்க வேண்டும். சாதாரண சளி, தலைவலி உள்ளிட்டவை ஏற்பட்டால் கொரோனா என நினைத்து அச்சப்படக்கூடாது. பொதுமக்கள் அனைவரும் தேவைகளை குறைத்துக் கொண்டு வெளியில் நடமாடாமல் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story