மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டையில் கொரோனா பீதிக்கு இடையே தற்காலிக மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள் + "||" + Between the Corona Panic at Palayamkottai In Temporary Marketing Convex public

பாளையங்கோட்டையில் கொரோனா பீதிக்கு இடையே தற்காலிக மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்

பாளையங்கோட்டையில் கொரோனா பீதிக்கு இடையே தற்காலிக மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்
பாளையங்கோட்டையில் கொரோனா பீதிக்கு இடையே தற்காலிக மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
நெல்லை, 

சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க திறந்தவெளியில் கடைகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளி விட்டு மக்கள் பொருட்கள் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அந்த வகையில் நெல்லை டவுன், பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் அவை நேற்று முன்தினம் மூடப்பட்டன. இதில் பாளையங்கோட்டை மார்க்கெட்டுக்கு பதிலாக அங்குள்ள வியாபாரிகள் திறந்தவெளியில் கடைகள் அமைக்க மார்க்கெட் அருகே போலீஸ் குடியிருப்பு அகற்றப்பட்ட காலி இடம், நேருஜி கலையரங்க திடல், வ.உ.சி. மைதானம் ஆகிய 3 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதில் போலீஸ் குடியிருப்பு காலி இடத்தில் மட்டும் நேற்று தற்காலிக மார்க்கெட் செயல்படத் தொடங்கியது.

இங்கு நேற்று 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகளை குவித்து வைத்து விற்பனை செய்தனர். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் ஒரே நேரத்தில் காய்கறிகள் வாங்க மார்க்கெட்டில் குவிந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததோடு, அவர்கள் முக கவசம் அணியாமல், பாதுகாப்பு இன்றி அருகருகில் நெரிசலில் நின்று காய்கறிகளை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு நின்று கொண்டிருந்த பொது மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் திணறினர். பின்னர் வியாபாரிகளை எச்சரித்து, பொதுமக்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நின்று காய்கறிகள் வாங்கிச்செல்லும் வகையில் வட்டம் போட்டார்கள். இருந்தாலும் பொதுமக்கள் கொரோனா பீதியை பற்றி கவலைப்படாமல், காய்கறிகள் வாங்குவதில் கவனமாக இருந்து, தேவையானவற்றை வாங்கிச்சென்றனர்.

இதேபோல் பாளையங்கோட்டை மகாராஜ நகர் பூங்காங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட், மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதி தற்காலிக மார்க்கெட்டுகளிலும் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் அதன் கொடூரத்தை உணராமல் இருக்கிறார்கள். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்று அரசு அறிவித்தபோதும் ஒரே இடத்தில் ஏராளமானோர் கூடுகிறார்கள். இதன்மூலம் கொரோனா வைரஸ் எளிதில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, இதை உணர்ந்து பொதுமக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்“ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாளையங்கோட்டை சிவன் கோவில் தெப்பக்குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு: ஒரே நாளில் 27 வீடுகள் இடிப்பு போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிரடி
பாளையங்கோட்டை சிவன் கோவில் தெப்பக்குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 27 வீடுகள் நேற்று ஒரே நாளில் இடித்து அகற்றப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
2. பாளையங்கோட்டையில் அம்மா உணவகத்தை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு
பாளையங்கோட்டையில் அம்மா உணவகத்தை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு செய்தார்.