கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஒரே தவணையில் 7.150 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது.
ஊத்துக்கோட்டை,
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சராசரியாக வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. இடையில் தண்ணீர் வரத்து வினாடிக்கு வெறும் 100 கனஅடியாக குறைந்தது.
இதையடுத்து தமிழக அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டியை சந்தித்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பை அதிகரிக்கும்படி வலியுறுத்தினர். அதன்படி கடந்த 8-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாகியது. நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 569 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 28.34 அடியாக பதிவானது. 1,485 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 630 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆண்டுக்கு 2 தவணைகளில் அதாவது, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிடவேண்டும்.
அதன்படி 1996-ம் ஆண்டு முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 2006-ம் ஆண்டு இரு தவணைகளில் சேர்த்து அதிகபட்சமாக 7.950 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது. தற்போது செப்டம்பர் 28-ந் தேதி முதல் நேற்று காலை வரை ஒரே தவணையில் 7.150 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.
Related Tags :
Next Story