திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள தெற்கு உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு


திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள தெற்கு உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 March 2020 3:45 AM IST (Updated: 28 March 2020 3:40 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள தெற்கு உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் முகக்கவசங்களை அணியும்படி அறிவுறுத்தினார்.

திருப்பூர்,

திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தெற்கு உழவர் சந்தை, அம்மா உணவகம், தினசரி மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது முகக்கவசங்களை அணிந்து கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

இதுகுறித்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் பல்வேறு துறை சார்ந்து திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக 5 குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மார்ச் 1-ந்தேதிக்கு பிறகு, பல்வேறு நாடுகளிலிருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வருகை புரிந்த சுமார் 1156 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நமது மாவட்டத்திலிருந்து முகக்கவசங்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் உற்பத்தி செய்யப்பட்டு, மாநிலத்திலுள்ள பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள மளிகைக்கடைகளின் தொலைப்பேசி எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கும் மற்றும் பெரிய சூப்பர் மார்க்கெட் மூலம் வீட்டுக்கு வந்து பொருட்கள் தருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் தெற்கு உழவர் சந்தை, தினசரி சந்தை, அம்மா உணவகம் மற்றும் மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில், அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் கடைகளில் கூட்டமாக நிற்காமல், இடைவெளி விட்டு நிற்கவும் மற்றும் முகக்கவசங்களை அணிந்துகொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

Next Story