பெங்களூருவில் இந்திரா உணவகம் மூலம் ஏழைகளுக்கு உணவு பொட்டலம் வினியோகம் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
பெங்களூருவில் இந்திரா உணவகங்கள் மூலம் ஏழை மக்களுக்கு உணவு பொட்டலம் வினியோகம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில் சமூக விலகல்படி அனைவரும் 1 மீட்டர் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மாவட்ட பொறுப்பு மந்திரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளேன். இன்று (அதாவது நேற்று) காலை பிரதமர் மோடி என்னுடன் தொலைபேசியில் பேசினார்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய பிறகும் மக்கள் வெளியில் நடமாடுவதாகவும், அதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். அதனால் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். பெங்களூருவில் இந்திரா உணவகங்கள் மூலம் ஏழை மக்களுக்கு உணவு பொட்டலம் வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளோம். கொரோனா நோய் தாக்கினாலே சாவு வந்துவிடுமோ எனற பயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இது தவறு. அந்த வைரஸ் பாதித்தவர்களில் 80 முதல் 90 சதவீதம் பேர் குணம் அடைகிறார்கள். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். யாரும் பீதியடைய தேவை இல்லை. நம்மிடம் தேவையான அளவுக்கு மருந்து, மாத்திரைகள் உள்ளன. மேலும் மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
உணவு பொருட்கள் அதாவது அரிசி, பருப்பு, காய்கறி, பழங்கள், தக்காளி உள்ளிட்டவை தேவையான அளவுக்கு இருப்பு உள்ளன. விவசாயிகளிடம் இருந்த இத்தகைய உணவு பொருட்களை நேரடியாக கொண்டு வந்து மக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே மக்கள் தங்களின் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம். கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் முஸ்லிம் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டமாக ஒரே இடத்தில் கூட்டு பிரார்த்தனை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அதை அந்த மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story